
டெல்லி, டிச. 5- பெரும்பாலான இந்திய குடும்பங்களின் கனவு எப்படியாவது ஒரு அரசு வேலை வாங்கி விட வேண்டும் என்பது தான். குறிப்பாக ரயில்வே துறையில் எப்படியாவது வேலை பெற்றுவிட வேண்டும் என லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து வருகின்றனர். ரயில்வே வேலைகளுக்காக தயாராகி வரக்கூடிய நபர்களுக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் ஒரு நல்ல செய்தியை வெளியிட்டு இருக்கிறார். இந்திய ரயில்வேயில் 1,20,579 காலி பணியிடங்களுக்கு ஆட்களை நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்ற வருகிறது. மக்களவையில் ரயில்வே துறையில் காலி பணியிடங்கள் நிரப்புவது தொடர்பான கேள்வி முன்வைக்கப்பட்டது . அதற்கு பதில் அளித்த ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் “ஏற்கனவே வேலையில் இருப்பவர்கள் ஓய்வு பெறுவது, சில சேவைகளை விரிவாக்கம் செய்வது, தொழில்நுட்ப ரீதியாக அப்கிரேட் செய்வது உள்ளிட்டவை காரணமாக ரயில்வே துறையில் காலியிடங்கள் அதிகரிக்கின்றன. அதற்கு ஏற்ற வகையில் ரயில்வே தேர்வு வாரியம் அடுத்தடுத்து நோட்டிபிகேஷன் வெளியிட்டு தொடர்ச்சியாக ரயில்வேக்கு ஆட்களை எடுத்துக் கொண்டு வருகிறது” என தெரிவித்திருக்கிறார்.


















