ராஜஸ்தான் துயரம் – பலி அதிகரிப்பு

டெல்லி: அக்டோபர் 15-
ராஜஸ்தானில் தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில், பேருந்தில் பயணித்தவர்களில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தீ விபத்து குறித்து உடனடியாக தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும், ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் இறங்கினர். 16 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூர் நோக்கி சென்ற தனியார் பேருந்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.
ஜெய்சல்மேர்-ஜோத்பூர் நெடுஞ்சாலையில் நேற்று மதியம் 3.30 மணியளவில், குளிர்சாதன பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் பின்புறம் இருந்து புகை வந்திருக்கிறது. இதனையடுத்து பேருந்தை நிறுத்திவிட்டு, ஓட்டுநர் கீழே இறங்கியுள்ளார். ஆனால் அதற்குள் தீ வேகமாக பரவியுள்ளது. பேருந்தின் குளிர்சாதனப் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும், அதுவே பேருந்து முழுவதும் தீ பரவ காரணம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. பேருந்தில் 19 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஒருவர் ஜோத்பூர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்களின் அடையாளத்தை உறுதி செய்ய டிஎன்ஏ பரிசோதனைகள் நடத்தப்படும் என்று அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த துயரச் சம்பவத்திற்கு முதலமைச்சர் பஜன் லால் ஷர்மா இரங்கல் தெரிவித்தார். விபத்தின் தீவிரத்தை அறிந்த அவர் ஜெய்சல்மேருக்கு விரைந்து சென்றார்.
ஜெய்சல்மேர் நகராட்சி மன்றத்தின் உதவி தீயணைப்பு அதிகாரி கிருஷ்ணபால் சிங் ரத்தோர் கூறுகையில், 4 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் உட்பட சுமார் 15 பயணிகள் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை 125-ல் கிரீன் காரிடார் அமைக்கப்பட்டு, ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனையை விரைவில் சென்றடைய உதவும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்று கூறியிருக்கிறார்.