ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி

சென்னை: மே 9 –
பாகிஸ்தான் இந்தியா மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராகவும், இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி நாளை சென்னையில் நடத்தப்படு என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள தீவிரவாதிகளின் முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது.
இதில் தீவிரவாதிகள் தவிர்த்து பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என இந்திய ராணுவமும் வெளியுறவுத் துறை அமைச்சகமும் விளக்கம் அளித்து இருந்தது. அதே நேரத்தில் இந்தியாவின் தாக்குதல் போர் நடவடிக்கை தான் என்றும் அதற்கு தக்க பதிலடி வழங்கப்படும் என பாகிஸ்தான் கொக்கரித்தது.
எந்த நேரமும் இரு நாடுகளிடையே போர் ஏற்படலாம் என்ற சூழ்நிலையில் வியாழக்கிழமை அதிகாலையில் சீனா வழங்கிய ஏவுகணைகளை கொண்டு பாகிஸ்தான் இந்தியா எல்லை பகுதிகளில் தாக்குதல் நடத்தியது.
அதே நேரத்தில் ரஷ்யா வழங்கிய பாதுகாப்பு அமைப்புகளை கொண்டு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. மேலும் பதிலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை இந்திய ராணுவம் அழித்தது. இதற்கிடையே வியாழக்கிழமை இரவு நேரத்தில் பாகிஸ்தான் திடீரென இந்திய எல்லைப் பகுதிகளில் தாக்குதலை நடத்த தொடங்கியது.
இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்ததோடு, பாகிஸ்தானுக்குள்ளேயும் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராகவும், இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி நாளை சென்னையில் நடத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,” பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது.
அதனை வெளிப்படுத்தும் வகையில் ஒரு பேரணியை நாளை மாலை 5 மணிக்கு சென்னையிலுள்ள காவல் துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து எனது தலைமையில் முன்னாள் படைவீரர்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள். பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்குபெறும் பேரணி நடைபெறும். இந்த பேரணி தீவுத்திடலில் அருகே உள்ள போர் நினைவுச்சின்னம் அருகில் நிறைவு பெறும். இந்த பேரணி, இந்திய ராணுவத்தின் வீரத்தையும் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் போற்றுவதற்கும், தேச ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டு மக்கள் இந்த பேரணியில் பங்கேற்று, நமது ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.” என கூறப்பட்டுள்ளது.