
புதுடில்லி:மே 29-பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை அழித்ததுடன், அந்நாட்டின் முக்கிய விமானப்படை தளங்களையும், தகவல் தொடர்பு அமைப்புகளையும் சேதப்படுத்தி அந்நாட்டை சரணடைய வைத்து, இந்தியர்கள் அனைவரையும் பெருமைப்பட வைத்தது இந்திய ராணுவம்.
இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையிலும், சாதனை புரிந்த ராணுவத்தை கவுரவப்படுத்தும் வகையிலும், முப்படை தளபதிகளையும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்குமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அழைப்பு விடுத்துள்ளது. வரும் 3-ம் தேதி அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் ராணுவ தளபதிகள் தங்கள் வீரர்களுடன் விருந்தினர்களாக பங்கேற்க உள்ளது இந்தியர்களுக்கு பெருமையளிக்கும் விஷயமாகும்.
கிரிக்கெட் வாரியத்தின் இந்த புதிய முயற்சியை இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வரவேற்றுள்ளார். ‘‘இந்திய மக்கள் அனைவருக்கும் உதவிபுரிந்து, பாதுகாத்து, எல்லைகளை காக்கும் ராணுவத்துக்கு தேசம் மரியாதை செலுத்துவது அவசியம். அந்த வகையில் கிரிக்கெட் வாரி யத்தின் முன்மாதிரியான இந்த செயல் பாராட்டுக்குரியது’’ என்று கம்பீர் தெரிவித்திருப்பது இந்திய மக்கள் அனைவரையும் பெருமைப்பட வைத்துள்ளது.
கிரிக்கெட்டை விரும்பும் நாடான இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடந்துவரும் நேரத்தில், பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. அதற்கு பதிலடி தர பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணைகளை வீச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்த பதற்றமான சூழலில் கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
போர் சூழல் முடிவுக்கு வந்தபின்னரே மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடரும் நிலை ஏற்பட்டது. தொடர்ந்து போர் நடந்திருந்தால் கிரிக்கெட் வாரியத்துக்கு பெரும் பண இழப்பு ஏற்பட்டிருக்கும். ஒருபுறம் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், மறுபுறம் கோடிக்கணக் கான இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் சார்பாகவும் ராணுவ தளபதிகளை அழைத்து பிசிசிஐ கவுரவிக்க நினைத்திருப்பது பாராட்டுக்குரிய செயல்.