
சிட்னி, ஜன. 5- ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியின் முதுகெலும்பான ஜோ ரூட் புதிய சரித்திரம் படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில், ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்து கிரிக்கெட் உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், தனது கிளாசிக் ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட், டெஸ்ட் போட்டிகளில் தனது 41-வது சதத்தை பூர்த்தி செய்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஜோ ரூட் தற்போது மூன்றாம் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தப் பட்டியலின் விபரம்: சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) – 51 சதங்கள் ஜாக் காலிஸ் (தென்னாப்பிரிக்கா) – 45 சதங்கள் ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) & ஜோ ரூட் (இங்கிலாந்து) – 41 சதங்கள் குமார் சங்கக்காரா (இலங்கை) – 38 சதங்கள் ரிக்கி பாண்டிங் ஓய்வு பெற்றுப் பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தற்போது விளையாடி வரும் வீரர்களில் சச்சினின் 51 சதங்கள் என்ற இமாலய சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ள ஒரே வீரராக ஜோ ரூட் திகழ்கிறார். 2021 முதல் அதிக சதம் கடந்த சில ஆண்டுகளாக ஜோ ரூட் இருக்கும் ஃபார்ம், மற்ற பேட்ஸ்மேன்களைக் கதிகலங்க வைத்துள்ளது. 2021-ம் ஆண்டு முதல் மட்டும் அவர் 24 சதங்களை விளாசியுள்ளார். அவருக்கு அடுத்த இடங்களில் உள்ள ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஹாரி ப்ரூக் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இந்தக் காலகட்டத்தில் தலா 10 சதங்களை மட்டுமே அடித்துள்ளனர் என்பது ரூட்டின் ஆதிக்கத்திற்குச் சான்றாக விளங்குகிறது. போட்டி நிலவரம் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த இங்கிலாந்து அணிக்குத் தொடக்கம் அதிர்ச்சியாகவே அமைந்தது. ஜாக் கிராவ்லி (16), பென் டக்கெட் (27) மற்றும் ஜேக்கப் பெத்தல் (10) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 57 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த இக்கட்டான நேரத்தில் களத்தில் நங்கூரம் பாய்ச்சிய ஜோ ரூட், இளம் வீரர் ஹாரி ப்ரூக்குடன் இணைந்து அணியை மீட்டார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டிற்கு 169 ரன்கள் சேர்த்தது. ஹாரி ப்ரூக் 84 ரன்களில் (97 பந்துகள்) ஆட்டமிழந்தார். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டக்-அவுட் ஆகி ஏமாற்றினாலும், விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் 46 ரன் சேர்த்து ரூட்டிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்தார். சாதனைத் தருணம் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் மைக்கேல் நேசர் வீசிய 59.1-வது ஓவரில், பந்தை லாவகமாகத் தட்டிவிட்டு 2 ரன்கள் ஓடி தனது 41-வது சதத்தைப் பூர்த்தி செய்தார் ரூட். ஹெல்மெட்டைக் கழற்றி முத்தமிட்டு, வானத்தை நோக்கிப் பேட்டை உயர்த்தி அவர் சதத்தை கொண்டாடினார். இந்தத் தொடரில் இது ஜோ ரூட்டின் 2-வது சதமாகும். 1994/95-க்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் ஆஷஸ் தொடர் ஒன்றில் பல சதங்களை அடித்த 4-வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.


















