
சூரத்: பிப்ரவரி 17-
வெறும் 12 ரூபாயுடன் சூரத் நகருக்கு வந்த ஒரு கிராமத்து சிறுவன், இன்று 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு மாபெரும் வைர வியாபார சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார். அவர்தான் ‘ஹரிகிருஷ்ணா எக்ஸ்போர்ட்டர்ஸ்’ நிறுவனர் சாவ்ஜி தோலக்கியா.குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள துதாலா கிராமத்தில் பிறந்த சாவ்ஜி, 12 வயதில் வெறும் 12 ரூபாயுடன் சூரத்தில் காலடி எடுத்து வைத்தார். வைரத் தொழிலில் சாதாரணத் தொழிலாளியாகத் தொடங்கி, பின்னர் தனது சித்தப்பாவின் நிதி உதவியுடன் சொந்தத் தொழிலைத் தொடங்கினார். இன்று அவரது நிறுவனம் ஆண்டுக்கு ரூ.15,000 கோடிக்கும் மேல் வர்த்தகம் செய்யும் மாபெரும் நிறுவனமாக உயர்ந்துள்ளது. இன்று இந்தியாவின் ‘வைர ராஜா’ என்று அழைக்கப்படுகிறார்.
சாவ்ஜி தோலக்கியா வெறும் தொழிலதிபராக மட்டுமல்லாமல், தனது ஊழியர்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாகவும் அறியப்படுகிறார். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகையின்போது, தனது நிறுவனத்தில் சிறப்பாகப் பணியாற்றும் ஊழியர்களுக்கு கார், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வைர நகைகளைப் பரிசாக வழங்கி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.“நான் பணிபுரியும் நிறுவனம் என் நலனில் அக்கறை கொண்டிருக்கிறது என்பதை ஊழியர்கள் உணரும்போது, அவர்கள் வேலையிலும் வாழ்விலும் சிறப்பாகச் செயல்படுவார்கள். நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவியவர்களுடன் வெற்றியைப் பகிர்ந்து கொள்ள எனது லாபத்தைக் குறைத்துக் கொள்வதில் மகிழ்ச்சியே” என்கிறார்.கடந்த ஜனவரி 1ம் தேதி சாவ்ஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “வெற்றி என்பது சத்தத்தால் அளவிடப்படுவதில்லை; அது நமது விடாமுயற்சி, நோக்கம் மற்றும் விழுமியங்களால் அளவிடப்படுகிறது. ஒரு புதிய ஆண்டு என்பது நாம் சற்று நிதானித்து, உண்மையில் நமக்கு எது முக்கியம் என்பதைச் சிந்திப்பதற்கான வாய்ப்பு” என பதிவிட்டிருந்தார்.தற்போது 50 ஏக்கரில் பிரம்மாண்டமான வீட்டில் சாவ்ஜி வசிக்கிறார். மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த அவரது குடும்பத்தினர் 64 பேரும் ஒரே கூரையின் கீழ் வசிக்கின்றனர். இதுவே வாழ்நாள் கனவு என்று அவர் பெருமையுடன் கூறுகிறார்.
வெறும் வியாபாரத்துடன் நின்றுவிடாமல், குஜராத்தின் தண்ணீர் பஞ்சத்தைப் போக்க தனது சொந்த கிராமமான துதாலா உட்பட மாநிலம் முழுவதும் பல ஏரிகளை உருவாக்கி, ஒரு சிறந்த சமூக தொழில்முனைவோராகவும் அவர் திகழ்கிறார்.
















