
பெங்களூரு: ஜூலை 18-
சுமார் 21 கோடி ரூபாய் மதிப்பிலான ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு வழக்கை மூடி மறைக்க, மைசூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் 1 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய சரக்கு மற்றும் சேவை வரி உளவுத்துறை மூத்த அதிகாரி மீது மத்திய புலனாய்வு அமைப்பு ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளது. லஞ்சப் புகார் எதிரொலியாக, மத்திய ஜிஎஸ்டி பிரிவின் மூத்த உளவுத்துறை அதிகாரி பிரவீண் குமார் யாதவ் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மைசூரைச் சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி முகமது கம்ரான் (24) என்பவரிடம், கடந்த 2025ஆம் ஆண்டு அதிகாரி பிரவீண் குமார் 1 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. எஃப்.ஐ.ஆர் விவரங்களின்படி, கடந்த 2025 செப்டம்பர் 10 அன்று தொழிலதிபர் கம்ரான் வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, இந்த வழக்கிலிருந்து தப்பிக்க வைக்க அதிகாரி பிரவீண் குமார் ரூ.1 கோடி லஞ்சம் கேட்டுள்ளார். அன்றைய தினமே இரவு 9:30 மணியளவில் வாட்ஸ்அப் மூலம் லொகேஷன் அனுப்பி, மைசூரில் உள்ள பார்க்லேன் ஹோட்டல் அருகே பணத்தைக் கொண்டு வருமாறு கூறியுள்ளார். கம்ரான் தனது நண்பருடன் சென்று ரூ.1 கோடி ரொக்கம் இருந்த பெட்டியை அந்த அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார்.
பணத்தைப் பெற்ற அடுத்த நாளே, பிரவீண் யாதவ் மீண்டும் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு, வழக்கை முழுமையாக முடிக்க கூடுதலாக 4 கோடி ரூபாய் தர வேண்டும் என மிரட்டியதாக கம்ரான் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த லஞ்ச விவகாரம் தொடர்பாக டிஜிஜிஐ நடத்திய முதற்கட்ட உள் துறை விசாரணையில், அதிகாரி பிரவீண் யாதவ் தொழிலதிபருடன் தொடர்பில் இருந்ததும், மேல் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமல் உண்மையை மறைத்ததும் உறுதியானது. இதையடுத்து, கடந்த 2025 அக்டோபரிலேயே சிபிஐயிடம் புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த கர்நாடக அரசு இந்தாண்டு (2026) மார்ச் 6 அன்றும், மத்திய அரசு ஜூன் 8 அன்றும் அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, கடந்த வாரம் சிபிஐ இந்த எஃப்.ஐ.ஆரை பதிவு செய்துள்ளது.
மறுபுறம், போலி இன்வாய்ஸ்களை தயாரித்து ரூ.21 கோடி ஜிஎஸ்டி மோசடி செய்த குற்றத்திற்காக தொழிலதிபர் கம்ரான் கடந்த 2025 செப்டம்பர் 16 அன்று கைது செய்யப்பட்டார். தனது கைது சட்டவிரோதமானது என கம்ரான் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், இந்த வாரம் ஜூலை 7 அன்று கர்நாடக உயர்நீதிமன்றம் அவரது கைது செல்லுபடியாகும் என உத்தரவிட்டது. நீதிமன்றத் தீர்ப்பு வந்த மறுநாளே (ஜூலை 8) சிபிஐ இந்த ஊழல் அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.













