
சென்னை: ஜூன் 18-
தூத்துக்குடியில் ரூ.38ஆயிரம் கோடி முதலீட்டில் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் அமைக்கப்படும் அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் தொடர்பாக முதல்வர் விஜய்யுடன், எச்டி கேஎஸ்ஓஇ நிறுவன அலுவலர்கள் சந்தித்தனர்.தென் கொரியாவைத் தலைமையகமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய கப்பல் கட்டுமான நிறுவனம் எச்டி ஹுண்டாய். இந்நிறுவனம் தூத்துக்குடியில் அதிநவீன கப்பல் கட்டுமானத் தொகுதி ஒன்றை அமைக்க, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இங்கு திட்டமிடப்பட்டுள்ள மிகப் பெரிய கப்பல் கட்டுமானத் தள திட்டத்தின் செயல்பாட்டு நிலைகள் குறித்து, இந்நிறுவனத்தின் உலகளாவிய வணிகப் பிரிவு இயக்குநர் யங் ஹூன் குவான் தலைமையிலான உயர்மட்ட அலுவலர்கள் நேற்று முதல்வர் விஜய்யை தலைமைச்செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்தியாவில் புதிதாக உருவாகவுள்ள இந்தக் கப்பல் கட்டுமானத் திட்டத்தில் ரூ.38,000 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம், 15 ஆயிரம் பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.மேலும், துணைத் தொழில்கள் மற்றும் உள்ளூர் விநியோகச் சங்கிலி மூலம் மாநிலத்தில், மேலும் பல வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். இத்திட்டத்துக்காக, சிப்காட் மற்றும் வ.உ.சி. துறைமுக ஆணையம் ஆகியவை இடையில் தமிழ்நாடு தேசிய கப்பல் கட்டுமானம் மற்றும் கனரக தொழிற்சாலைகள் பூங்கா (NSHIPTN) என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது.
இக்கப்பல் கட்டுமானத் தொகுதியை நிறுவ முதல் கொள்கை அளவிலான ஒப்புதலை, இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து இயக்குநரகத்திடம் இருந்து இந்நிறுவனம் பெற்றுள்ளது. முதல்வருடனான சந்திப்பின் போது, இத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து நிறுவனத்தின் உயர்மட்ட அலுவலர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.


















