Home மாவட்டங்கள் பெங்களூர் ரூ.5.3 கோடி மோசடி: தந்தை, மகள் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு

ரூ.5.3 கோடி மோசடி: தந்தை, மகள் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு

பெங்களூரு: ஜூலை 17 –
போலி பணி நியமன ஆணை மற்றும் போலி இமெயில் ஐடிகளை உருவாக்கி, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த தந்தை மற்றும் மகள் மீதான வழக்கை ரத்து செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடியாக மறுத்துவிட்டது.
இதுகுறித்த விவரம் வருமாறு:
பெங்களூருவைச் சேர்ந்த சம்ஷாத் பேகம் மற்றும் அவரது தந்தை எம்.ஏ.மன்சூர் அகமது ஆகியோர் மீது அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியதாக போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்கள் தங்களை காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் என காட்டி, பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி வேலை தேடும் இளைஞர்களிடம் சுமார் 5.3 கோடி ரூபாய் வரை சுருட்டியதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு போலி பணி நியமன ஆணைகளை வழங்கியதோடு மட்டுமல்லாமல், போலியான அரசு இமெயில் ஐடிகள் மூலமாகவே கடிதங்களையும் அனுப்பியுள்ளனர். மேலும், நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதற்காக கொல்கத்தா மற்றும் மகாராஷ்டிராவில் போலி பயிற்சி முகாம்களையும் நடத்தி, அதில் இளைஞர்களை பங்கேற்கச் செய்து நாடகமாடியுள்ளனர். பின்னரே, இது மிகப்பெரிய மோசடி வலைப்பின்னல் என்பது இளைஞர்களுக்கு தெரியவந்தது.
இந்த நிலையில், தங்கள் மீது பதியப்பட்ட கிரிமினல் வழக்கை ரத்து செய்யக் கோரி தந்தை, மகள் இருவரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி எம்.நாகபிரசன்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “பாதிக்கப்பட்ட யாரும் நேரடியாக புகார் அளிக்கவில்லை, முன்விரோதம் காரணமாகவே இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது” என வாதிடப்பட்டது.
இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதையும், போலி ஆவணங்கள் மூலம் பெரிய அளவில் மோசடி அரங்கேறியுள்ளதையும் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.நாகபிரசன்னா, மனுவைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டார். அவரது தீர்ப்பில் குறிப்பிட்டதாவது: “போலி பணி நியமன ஆணைகள், போலி இமெயில் ஐடிகள் மற்றும் போலி பயிற்சி மையங்களை உருவாக்கி, அப்பாவி மக்களை ஏமாற்றும் மோசடி பேர்வழிகளுக்கு இந்த நீதிமன்றம் ஒருபோதும் பாதுகாப்பு கரம் நீட்டாது. ஒரு இடத்தில் போலி என்றால், அது எல்லா இடத்திலும் போலிதான். இந்த வழக்கில் ஆரம்பக்கட்ட விசாரணையிலேயே வேலை தேடும் இளைஞர்களை ஏமாற்ற மிகப்பெரிய சதி நடந்துள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது. எனவே, முழுமையான விசாரணை நடத்தி உண்மை வெளிவர வேண்டும்.”இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.