
புதுடெல்லி: டிசம்பர் 23-
பாஜகவுக்கு 2024-25ம் நிதியாண்டில் மட்டும் ரூ.6,088 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியை விட அந்த கட்சிக்கு 12 மடங்கு நன்கொடை அதிகரித்துள்ளது. காங்கிரஸ், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம், நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகளுக்கான நன்கொடைகள் முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது பெரும் சரிவை கண்டுள்ளது. இதுதொடர்பான முழு விவரம் வருமாறு:
நம் நாட்டில் செயல்படும் ஒவ்வொரு கட்சிகளும் தங்களின் தேர்தல் செலவு மற்றும் நன்கொடை விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இதனை செய்ய தவறும் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
அந்த வகையில் தான் கடந்த 2024-25 நிதி ஆண்டுக்கான தேர்தல் செலவு, நன்கொடை விவரங்களை கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளன. அதன்படி 2024 ஏப்ரல் 1ம் தேதிமுதல் 2025 மார்ச் 30ம் தேதி வரை (2024-25ம் நிதி ஆண்டு) கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்கள் வருமாறு:
2024-25ம் ஆண்டில் ஆண்டில் தான் நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் நடந்தது. அதுமட்டுமின்றி அருணாச்சல பிரேதசம், சிக்கிம், ஆந்திரா ஒடிசா, ஜம்மு காஷ்மீர், ஹரியானா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட இடங்களுக்கான சட்டசபை தேர்தல் நடந்தது. இந்நிலையில் தான் 2024-2025ம் நிதி ஆண்டில் பாஜகவக்கு ரூ.6,088 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது. கடந்த 2023-24 நிதி ஆண்டில் மொத்தம் ரூ.3,967 கோடி மட்டுமே நன்கொடையாக கிடைத்த நிலையில் தற்போது 53 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
மேலும் கடந்த 6 ஆண்டுகளில் பாஜக பெற்ற நன்கொடைகளில் இதுதான் அதிகமாகும். 201 -20ம் ஆண்டில்பாஜகவுக்கு ரூ.3,427 கோடியும், 2020-21ம்ஆண்டில் ரூ.578 கோடியும், 2021-22ம் ஆண்டில் ரூ.1,775 கோடியும், 2022-23ம் ஆண்டில் ரூ.2,20 கோடியும், 2023-24ம் ஆண்டில் ரூ.3,967 கோடியும் நன்கொடை கிடைத்த நிலையில் 2024-25ம் ஆண்டில் ரூ.6,088 கோடியை நன்கொடையாக அள்ளி உள்ளது. இது காங்கிரஸ் கட்சி பெற்ற நன்கொடையை விட 12 மடங்கு அதிகமகும். அதேவேளையில் பிற கட்சிகளுக்கான நன்கொடை மளமளவென சரிந்துள்ளன. அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு 2023-24ம் ஆண்டில் ரூ.1,129.66 கோடி நன்கொடை கிடைத்த நிலையில் 2024-25ம் ஆண்டில் நன்கொடை 522.13 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. அதில் ராகுல் காந்தி ரூ.2.30 லட்சம், ப சிதம்பரம் 3 கோடி, பிரியங்கா காந்தி 2.30 லட்சம், கேசி வேணுகோபால் ரூ.1.90 லட்சத்தை தங்களின் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளனர். அதேபோல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடந்த 2023-24ம் ஆண்டில் ரூ.646.39 காடி நன்கொடை பெற்றிருந்தது. இது 2024-25ம் ஆண்டில் ரூ.184.08 கோடியாக சரிந்துள்ளது. ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கடந்த 2023-24ம் ஆண்டில் ரூ.184.11 கோடி நன்கொடை பெற்றிருந்தது. இது 2024-25ம் ஆண்டில் ரூ.140.05 கோடியாக குறைந்துள்ளது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி கடந்த 2023-24ம் ஆண்டில் ரூ.274.65 கோடி நன்கொடை பெற்றிருந்தது. இது 2024-25ம் ஆண்டில் வெறும் ரூ.85.20 கோடியாக குறைந்துள்ளது. அதேபோல் ஒடிசாவின் முன்னாள் முதல்வர் நவீன்பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம் கட்சி கடந்த 2023-24ம் ஆண்டில் ரூ.245.5 கோடி காடி நன்கொடை பெற்றிருந்தது. இது 2024-25ம் ஆண்டில் ரூ.60 கோடியாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
















