புதுடெல்லி:செப். 11- கடந்த 2023 மற்றும் 2024 ஆகிய 2 ஆண்டுகளில் மட்டும் 1,000 கிலோ தங்கம் சீன எல்லை வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்டது அமலாக்கத் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.800 கோடியாகும். சீன எல்லை வழியாக இந்தியாவுக்குள் தங்கம் கடத்தி வரும் சட்டவிரோத நடவடிக்கைகளில் சீனர்கள், திபெத்தியர்களுக்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய – சீனா இடையே 3,488 கி.மீ. உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டருகில் இந்தோ – திபெத் எல்லைப் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கடந்த ஆண்டு ஜூலை மாதம் லடாக் பகுதியில் இந்தோ – திபெத் எல்லைப் போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
டெல்லியின் என்சிஆர் பகுதியில் 5 இடங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. லடாக்கில் ஒரு இடத்தில் சோதனை நடந்தது.
இந்த விவகாரத்தில் வருவாய் புலனாய்வு இயக்குநரகமும் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதன் விசாரணையில், சீன எல்லை வழியாக இதுபோல் 1,064 கிலோ தங்கம் கடத்தப்பட்டிருப்பதும், அதற்கான பணம் கிரிப்டோகரன்சி மூலம் செலுத்தப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 10 பேரை வருவாய் புலனாய்வுத் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.















