புதுடெல்லி; டிசம்பர் 31-
வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து நபர் சுட்டுக்கொல்லப்பட்டது பதற்றத்தை அதிகரித்து உள்ளது. வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வங்கதேச மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது.
முதலாவதாக மைமன்சிங்கில் இந்து இளைஞரான தீபு சந்திர தாஸை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. இதனை தொடர்ந்து இரண்டாவதாக ராஜ்பாரியின் பாங்ஷா மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் அன்று இந்து இளைஞரான அம்ரித் மொண்டல் கொல்லப்பட்டார். ஆனால், மொண்டலின் கொலை மத ரீதியான தாக்குதல் அல்ல, மாறாக மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையது என்று காவல் அதிகாரிகள் குறிப்பிட்டனர். இந்த கொலைகள் தொடர்பாக இதுவரை 12 பேரைக் கைது செய்துள்ளனர்.
தற்போது வங்கதேசத்தில் மற்றொரு இந்துவான பஜேந்திர பிஸ்வாஸ் என்பவர் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து அச்சத்தை எழுப்பியுள்ளது. வங்கதேசத்தின் மைமன்சிங் மாவட்டத்தில் உள்ள ஓர் ஆடைத் தொழிற்சாலையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரிந்த ஓர் இந்து ஊழியர் பஜேந்திர பிஸ்வாஸ் (42), சக ஊழியரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
















