வங்கதேசத்துக்கு பதிலாக மாற்று அணி- ஐசிசி

துபாய், ஜன. 22- ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அங்கம் வகித்த வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமானை, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உத்தரவின் பேரில் அந்த அணி நிர்வாகம் விடுவித்தது. வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த வங்கதேசம், இந்திய மண்ணில் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் விளையாடமாட்டோம். அங்கு எங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. எனவே தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை போட்டியை நடத்தும் மற்றொரு நாடான இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் கடைசி நேரத்தில் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்வது இயலாத காரியம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கைவிரித்தது. பலகட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுக முடிவு எட்டப்படவில்லை. இந்தியாவுக்கு செல்வதில்லை என்ற நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாத வங்கதேசம், எந்த வித அழுத்தத்துக்கும் அடிபணியமாட்டோம் என்றும் கொக்கரித்தது. இந்தியாவில் ஆடுவது குறித்து ஜன.21-ந்தேதிக்குள் (அதாவது நேற்று) தெளிவான முடிவு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மாற்று அணி அறிவிக்கப்படும் என ஐ.சி.சி., வங்கதேசத்தை எச்சரித்து இருந்தது. இதற்கிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், வங்கதேசத்துக்கு ஆதரவு கரம் நீட்டியது. ஐ.சி.சி.க்கு கடிதம் எழுதிய பாகிஸ்தான், வங்கதேசத்தின் உணர்வுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் அவர்களுக்குரிய ஆட்டங்களை ஆட்டங்களை பாகிஸ்தானில் நடத்த தயாராக இருப்பதாக அதில் கூறியிருந்தது.