வயநாடு : செப். 10- கேரளாவின் மலை மாவட்டமான வயநாட்டில், வங்கி கணக்கை வாடகைக்கு விட்டால் பணம் தருவதாக ஆசை காண்பித்து, ஒரு கும்பல் நுாதன மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதனால், 500க்கும் மேற்பட்ட இளைஞர்களும், பெண்களும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகளில் சிக்கித் தவிக்கின்றனர்.இயற்கை சீற்றம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புகளில் இருந்து கேரளாவின் வயநாடு மாவட்டம் மெல்ல மீண்டு வருகிறது. இந்நிலையில், அந்த மக்களின் வாழ்க்கையை புரட்டி போடும் அளவுக்கு நுாதன மோசடி நடந்திருப்பது, அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.உள்ளூரில் வசிக்கும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களிடம் அவர்களது வங்கி கணக்கை வாடகைக்கு எடுக்க, மாதம் 5,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் தருவதாக ஒரு கும்பல் ஆசை காண்பித்துள்ளது.
இதை நம்பி அவர்களும் வங்கி கணக்கு விபரங்கள், ஓ.டி.பி., எனப்படும் ஒருமுறை வரும் கடவு எண் உள்ளிட்ட தகவல்களை பரிமாறியுள்ளனர்.















