கடலூர், பிப். 10- கடலூா் மாவட்டம், வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் 154 வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டனர். கடலூர் மாவட்டம், வடலூரில் உலகப் புகழ்பெற்ற திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் சத்திய தருமச்சாலை,சத்திய ஞான சபையை நிறுவினார். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அது போல் இந்த ஆண்டு 154 வது ஜோதி தரிசன விழாவையொட்டி, இன்று (பிப்.10) சத்திய ஞான சபையில் அதிகாலை 5 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் பாடப்பட்டது. இதைத்தொடர்ந்து காலை 7.30 மணிக்கு தரும சாலையில் சன்மாா்க்கக் கொடி ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து வள்ளலாா் பிறந்த ஊரான மருதூர் வள்ளலார் சந்நிதியில் (இல்லம்) மருதூர் கிராம மக்களால் கொடியேற்றப்பட்டது. இதையடுத்து வள்ளலார் தண்ணீரால் விளக்கு எரியச்செய்த நற்கருங்குழியிலும், அவா் சித்திபெற்ற மேட்டுக்குப்பத்திலும் சன்மாா்க்கக் கொடிகள் ஏற்றப்பட்டது. இதையடுத்து சத்திய ஞான சபைக்கு இடம் வழங்கிய பாா்வதிபுரம் கிராம மக்கள் பலவகை பழங்கள், சீா்வரிசைப் பொருள்களுடன், வள்ளலாா் பயன்படுத்திய பொருள்களையும் வள்ளலார் திருவுருவ படத்தையும் பல்லக்கில் வைத்து மேள தாளங்கள் முழங்க ஊா்வலமாக சத்திய ஞான சபை வளாகத்தில் அமைந்துள்ள கொடிமரம் அருகே வந்து ஒன்று கூடினர். பின்னர் சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ‘அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை -அருட்பெருஞ்ஜோதி’ என்று முழக்கம் எழுப்பினர்.