Home மாவட்டங்கள் பெங்களூர் வட கர்நாடக ஏழை மாணவர்களுக்கு இலவச போட்டித் தேர்வு பயிற்சி

வட கர்நாடக ஏழை மாணவர்களுக்கு இலவச போட்டித் தேர்வு பயிற்சி

ஹூப்ளி: ஆக. 9-
வட கர்நாடகப் பகுதியைச் சேர்ந்த ஏழை மற்றும் திறமையான மாணவர்களுக்கு பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான உயர்தரப் பயிற்சியை வழங்கும் வகையில் புதிய கல்வி நிறுவனம் தொடங்கப்படும் என்று முன்னாள் முதலமைச்சரும், எம்.பி.யுமான பசுவராஜ் பொம்மை தெரிவித்தார்.
ஹூப்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர் கூறியதாவது:வட கர்நாடகப் பகுதியில் உள்ள மாணவர்களுக்கு பி.யூ.சி (12-ஆம் வகுப்பு) முதல் பட்டப்படிப்பு வரை ஒருங்கிணைந்த கல்வியுடன் போட்டித் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சியையும் வழங்கும் மையத்தைத் தொடங்குவதே நமது முதன்மை இலக்காகும்.
இதற்காக நிபுணர்கள் அடங்கிய நடவடிக்கைக் குழு ஒன்று அமைக்கப்படும். நிதி திரட்டுவதற்காகவும், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காகவும் தனிக்குழுக்கள் செயல்படும். வரும் ஏப்ரல் மாதத்திற்குள் பயிற்சிகளைத் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக, பெங்களூரு யலஹங்காவில் உள்ள 3 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்தி பயிற்சி மையம் அமைக்கப்படும். அங்குள்ள அனுபவமிக்க பயிற்சியாளர்களின் சேவையை நமது மாணவர்கள் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
அடுத்த 10 ஆண்டுகளில் இந்த நிறுவனத்தை நாட்டிலேயே மிகச் சிறந்த கல்வி நிறுவனமாக உயர்த்த இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் கே.எல்.இ அமைப்பின் தலைவருமான பிரபாகர் கோரே, கனேரி மடாதிபதி ஸ்ரீ அத்ரிஷ்ய காடசித்தேஸ்வர மகாஸ்வாமிகள், முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் எம்பிக்கள் அண்ணாசாஹேப் ஜொல்லே, ரமேஷ் கத்தி மற்றும் பல முக்கிய தலைவர்கள், தொழிலதிபர்கள் கலந்துகொண்டனர்.