Home மாவட்டங்கள் பெங்களூர் “நீங்கள் தீவிரவாதியா?” என கேட்டு சாப்ட்வேர் ஊழியர்கள் மீது தாக்குதல்

“நீங்கள் தீவிரவாதியா?” என கேட்டு சாப்ட்வேர் ஊழியர்கள் மீது தாக்குதல்

பெங்களூரு: ஆக. 9-
பெங்களூரில், “நீங்கள் தீவிரவாதியா?” எனக் கேட்டு இரண்டு சாப்ட்வேர் ஊழியர்களை மர்ம நபர் ஒருவர் ‘பேஸ்பால்’ மட்டையால் பயங்கரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரைச் சேர்ந்த சாப்ட்வேர் ஊழியர்களான சந்தீப் குமார் கோண்ட் மற்றும் ரோஹித் குமார் ஆகியோர் பெங்களூர் எச்.ஏ.எல். பகுதியில் உள்ள ஏ.இ.சி.எஸ். லேஅவுட்டில் வசித்து வருகிறார்கள். கடந்த 6-ந் தேதி அதிகாலை 4 மணி அளவில், இவர்கள் இருவரும் தங்களது நண்பருக்காக வீட்டின் அருகே காத்துக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ‘மகிந்திரா ஸ்கார்பியோ’ காரில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவன் காரை நிறுத்தி, இவர்களிடம், “நீங்கள் தீவிரவாதிகளா?” என்று கேட்டு மிரட்டியுள்ளான்.
அதற்கு அந்த ஊழியர்கள், “நாங்கள் இந்தியக் குடிமக்கள்” என்று கூறியுள்ளனர். இருப்பினும் ஆத்திரமடைந்த அந்த நபர், “உங்களது அடையாள அட்டையைக் காட்டுங்கள்” என அதட்டியுள்ளான். “அடையாள அட்டை கேட்க நீ யார்?” என்று சாப்ட்வேர் ஊழியர்கள் எதிர்த்துக் கேட்டதால், ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அந்த நபர், காரில் இருந்த ‘பேஸ்பால்’ மட்டையை எடுத்து வந்து இருவரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளான். இதில் அவர்களின் முகம் மற்றும் தொடைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. தாக்குதல் நடத்திய நபர் கடுமையான மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் சம்பவம் அங்குள்ள வங்கியின் ‘சிசிடிவி’ கேமராவிலும், ஊழியரின் செல்போனிலும் பதிவாகியுள்ளது. இதுகுறித்து எச்.ஏ.எல். காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டதை அடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவான அந்த மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.