Home செய்திகள் தேசிய செய்திகள் இ20 பெட்ரோலில் ஈரப்பதம், குளோரைடு – எண்ணெய் நிறுவனங்கள் மறுப்பு

இ20 பெட்ரோலில் ஈரப்பதம், குளோரைடு – எண்ணெய் நிறுவனங்கள் மறுப்பு

புதுடெல்லி, ஆக. 9- இ20 பெட்ரோலில் ஈரப்பதம், குளோரைடு இருப்பதாக கூறப்பட்டது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அதில் உண்மை ஏதும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.இது தொடர்பாக பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இ20 பெட்ரோலில் ஈரப்பதமும் குளோரைடும் இருப்பதாக சமீபத்திய ஊடகச் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் நாடு தழுவிய அளவில், முழு இ20 பெட்ரோல் விநியோகத்தையும் உள்ளடக்கிய ஒரு தீவிர சோதனையை மேற்கொண்டன.இதில் எரிபொருளின் தரம், நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள் சீராகவே உள்ளது என்பதை இந்த ஆய்வின் முடிவுகள் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. அறிவியல் பூர்வமான சோதனைகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வுகளின் அடிப்படையில், இ20 பெட்ரோலில் எந்தவிதமான சிக்கலும் இல்லை என்பதை ஆதாரங்கள் காட்டுகின்றன. எரிபொருளின் தரத்துக்கு மிக உயர்ந்த முன்னுரிமை அளிப்பதாகவும், வாகனத்தின் செயல்திறனையோ அல்லது நுகர்வோர் நம்பிக்கையையோ பாதிக்கக்கூடிய எந்தவொரு பிரச்சனையும் அதில் கண்டறியப்படவில்லை என்றும் எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பெட்ரோல் கலவையில் பயன்படுத்தப்படும் எத்தனால் குறித்த கடுமையான குளோரைடு தர விவரக்குறிப்பை மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. அத்துடன், இதை உறுதி செய்வதற்காக ஒரு உயர் கண்காணிப்பு அமைப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள், மதுபான ஆலைகள், கிடங்குகள், முனையங்கள், சில்லறை விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட விநியோகச் சங்கிலியின் பல இடங்களில் குளோரைடு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம், விநியோகத்தில் தரம் சீராகப் பராமரிக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது.