
புதுடெல்லி, மார்ச் 1- ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி அன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டர் விலையை மாற்றி அமைக்கின்றன. அந்த வகையில் இன்றைய தினம் சிலிண்டர் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும் வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும் எல்பிஜி சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயம் செய்கின்றன. ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி அன்று சிலிண்டர்களின் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்கின்றன. அந்த வகையில் மார்ச் மாதத்தின் முதல் நாளாக இன்று சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. நேற்று வரை 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் 1899.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் அதன் விலை 29.50 ரூபாய் உயர்த்தப்பட்டு 1929 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை அது தொடர்ந்து 868.50 காசுகளுக்கு விற்பனையாகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாதது சாமானிய மக்களுக்கு பெரிய நிவாரணம். மிடில் கிளாஸ் மக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை.

















