
புதுடெல்லி, ஜூலை 18- வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் அல்லது அதை தடுத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் வழங்க வகை செய்யும் புதிய மசோதாவை வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்கிறது. தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலை அவமதிப்பவர்களுக்கும் அதை பாடுவதற்கு தடை ஏற்படுத்துவோருக்கும் தண்டனை வழங்கும் தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய கீதமான ‘ஜன கண மன’ இசைக்கப்படும் அரசு நிகழ்ச்சிகளில், தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ இசைக்கப்படுவதை அல்லது பாடுவதை கட்டாயமாக்கி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. திங்கட்கிழமை (ஜூலை 20) தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறார்.













