அபுதாபி, செப். 10- 2025 ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே ஆப்கானிஸ்தான் அணி, ஹாங்காங் அணியை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. மேலும், ஆசியக் கோப்பை வரலாற்றிலேயே பெரிய வெற்றி பெற்ற அணிகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் இடம் பிடித்துள்ளது. இந்தப் போட்டியில் மேலும் சில சாதனைகளும் நிகழ்ந்தன. செப்டம்பர் 9 ஆம் தேதி அபுதாபியில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, செடிக்குல்லா அடல் மற்றும் அஸ்மத்துல்லா ஒமர்சாய் ஆகியோரின் அதிரடி அரைசதங்களின் உதவியுடன் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரர் செடிக்குல்லா அடல் 52 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில், அஸ்மத்துல்லா ஒமர்சாய் வெறும் 21 பந்துகளில் 53 ரன்கள் விளாசி ரசிகர்களை மகிழ்வித்தார். இந்த ஜோடியின் அதிரடியால், ஆப்கானிஸ்தான் அணி கடைசி கட்ட ஓவர்களில் ரன் வேகத்தை கணிசமாக உயர்த்தியது. இமாலய இலக்கை துரத்திய ஹாங்காங் அணி, தொடக்கம் முதலே தடுமாறியது. ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. பாபர் ஹயாத் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 39 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், ஹாங்காங் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியை சந்தித்தது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் ஆதிக்கம் செலுத்திய ஆப்கானிஸ்தான், பல புதிய சாதனைகளையும் படைத்துள்ளது. அதே சமயம், ஹாங்காங் அணி சில மோசமான சாதனைகளை தன்வசப்படுத்தியுள்ளது.



















