
நியூயார்க்: ஜனவரி 8-
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளான இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் மீது 500 சதவீதம் வரையிலான வரியை விதிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து இரு கட்சி உறுப்பினர்கள் மத்தியில் ஒப்புதல் பெற்று நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளதாகவும், மசோதாவை சமர்ப்பிக்க ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அமெரிக்க செனேட்டர் லிண்ட்சே கிரஹாம் தனது டிவிட்டர் பதிவு மூலம் தெரிவித்தார். இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம்..? ஏற்கனவே ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதற்காக ரெசிப்ரோக்கல் வரி உடன் அபராத வரி விதிக்கப்பட்டு உள்ள வேளையில் இந்த திடீர் வரி எதற்காக என்ற கேள்வி வருகிறது. இதற்கான பதில் வெள்ளிக்கிழமை அமெரிக்க நீதிமன்றத்தில் வெளியாகும் தீர்ப்பு.
டிரம்ப் அரசு, 1977ஆம் ஆண்டின் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் பிப்ரவரி 2025 முதல் ரெசிப்ரோக்கல் மற்றும் அபராத வரிகளை விதித்தது. இந்தச் சட்டம் தேசிய அவசர காலங்களுக்கு மட்டுமே என்றாலும், டிரம்ப் அரசு வர்த்தக வரிகளுக்கு பயன்படுத்தியது. இதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், தீர்ப்பு டிரம்ப் அரசுக்கு எதிராக வரலாம் என கணிப்புகள் அதிகமாக உள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விவாதம் நவம்பர் மாதம் அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசின் சட்ட அடிப்படை குறித்து சந்தேகம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நீதிமன்றம் ரெசிப்ரோக்கல் வரிகள் சட்டவிரோதம் என்று தீர்மானித்தால், டிரம்ப் அரசு இதுவரை ரெசிப்ரோக்கல் வரி மூலம் வசூலித்த தொகையை திருப்பி அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிடும். இல்லையெனில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் கீழ் நீதிமன்றங்கள் அல்லது அரசு இந்த விஷயத்தை கையாள அனுமதிக்குமா என்பதில் தெளிவில்லை.
இந்த நிலையில் டிரம்ப் சமூக வலைதளத்தில் செய்த பதிவில் அமெரிக்கா இந்த ரெசிப்ரோக்கல் வரி மூலம் 600 பில்லியன் டாலர் வரையிலான தொகையை வசூலித்தது அல்லது விரைவில் வசூலிக்கும் என்று கூறியுள்ளார்.
ஆனால், அமெரிக்க நிதி அமைச்சக தரவுப்படி, 2025 நிதியாண்டில் (செப்டம்பர் 30 வரை) மொத்த சுங்க வரி வசூல் அதிகப்பட்சமாக 195 பில்லியன் டாலர் மட்டுமே உள்ளது மேலும் அமெரிக்க சுங்க வரி அமைப்பின் டிசம்பர் 14 வரையிலான தரவுகள் படி, IEEPA கீழ் விதிக்கப்பட்ட ரெசிப்ரோக்கல் வரி 133.5 பில்லியன் டாலர் அளவில் மட்டுமே வசூலிக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கிறது.














