புதுடெல்லி, ஆகஸ்ட் 24- இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். வருங்காலத்தில் இந்தியாவின் விண்வெளி பயணம் புதிய உயரங்களை தொடும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சந்திரயான்-3 திட்டம் மூலம் கடந்த 2023 ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தென்துருவத்தில் இந்தியா கால் பதித்தது. இதை நினைவுகூரும் விதமாக கடந்த 2024-ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 23-ம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற தேசிய விண்வெளி தினவிழாவில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். அவர் பேசியதாவது: ‘ஆர்யபட்டாவில் இருந்து ககன்யான் வரை: பண்டைய ஞானத்தில் இருந்து எல்லையற்ற சாத்தியக்கூறுகள் வரை’ என்பதே இந்த ஆண்டு விண்வெளி தினத்தின் கருப்பொருள். கடந்த 2023-ல் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்து உலக சாதனை படைத்தோம். அதை தொடர்ந்து, விண்வெளியில் செயற்கைக் கோள்களை இணைக்கும் ‘டாக்கிங்’ தொழில்நுட்பத்தில் வெற்றி அடைந்துள்ளோம். இந்த தொழில்நுட்ப திறன் கொண்ட உலகின் 4-வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. நமது குரூப் கேப்டன் ஷுபான்ஷு சுக்லா வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று திரும்பியுள்ளார். அங்கு அவர் தேசியக் கொடியை ஏற்றி சாதனை படைத்தார். சமீபத்தில் நான் அவரை சந்தித்தபோது, அந்த கொடியை என்னிடம் காண்பித்தார். அதை பார்த்து பேரானந்தம் அடைந்தேன். இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உலகின் மிகப்பெரிய விண்வெளி மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது.














