Home செய்திகள் தேசிய செய்திகள் வர்த்தக சிலிண்டர் இனிகட்டுப்பாடு இல்லை

வர்த்தக சிலிண்டர் இனிகட்டுப்பாடு இல்லை

புதுடெல்லி: ஜூன் 26-
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவி வந்த போர்ச் சூழல் மற்றும் பதற்றம் தணிந்து, உலகளாவிய எரிசக்தி சந்தை சீரடைந்து வருவதை அடுத்து, வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விநியோகத்துக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கி மத்திய அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் ஓட்டல்கள், தொழிற்சாலைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் உடனடியாக நீக்கப்பட்டுள்ளன.அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதலை தொடங்கியது. இதையடுத்து, மேற்கு ஆசிய நாடுகளிலும் இந்தப் போர் பரவியது. இதனால், அங்கிருந்து இந்தியாவுக்கு வரும் எரிவாயுஇறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தியாவின் ஒட்டுமொத்த சமையல் எரிவாயு தேவையில் சுமார் 90 சதவீதம் மேற்கு ஆசிய நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில், பொதுமக்களின் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விநியோகத்தில் எவ்வித தட்டுப்பாடும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, மத்திய அரசு அவசரகால நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி, வர்த்தக ரீதியிலான எல்பிஜி விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டு, அந்த எரிவாயு வீட்டு உபயோகத்துக்குத் திருப்பி விடப்பட்டது. பின்னர் நிலைமை சற்று சீரானதும் 70 சதவீத விநியோகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எனினும், சில துறைகளுக்கு 50 சதவீத கட்டுப்பாடுகள் நீடித்து வந்தன.
கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்: தற்போது உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளதாலும், எல்பிஜி சரக்குக் கப்பல்கள் இந்தியாவுக்கு அடுத்தடுத்து வரவிருப்பதாலும் இந்த கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படுவதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, ஓட்டல் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டர்களுக்கான அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு, போருக்கு முந்தைய நிலையில் இருந்தபடியே 100% விநியோகம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.