
பெங்களூரு: ஆக. 14:
கர்நாடக மாநில விதான சௌதா சட்டசபை வளாகத்தில் உள்ள தாய் புவனேஸ்வரி சிலையின் முன்பாக பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மேலவை உறுப்பினர்கள் (எம்.எல்.சி.) திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு பா.ஜ.க. மாநில தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா நிருபர்களிடம் கூறியதாவது:-
நாட்டிலும் மாநிலத்திலும் பெண்கள் 50 சதவீதம் உள்ளனர். அவர்களுக்கு சம உரிமையும், தகுந்த பிரதிநிதித்துவமும் கிடைக்க வேண்டும். மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கொண்டுவந்தபோது, அதை காங்கிரசும் ராகுல் காந்தியும் எதிர்த்தனர். ஆனால், கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் அரசோ, பெண்களுக்கு அமைச்சரவையில் இடம் தராமல் ஒட்டுமொத்த பெண் சமூகத்தையே அவமதித்துள்ளது.
சமீபத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டபோது, பெண் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்படுவார் என ஊடகங்களில் செய்திகள் வந்தன. ஆனால், கடைசி நேரத்தில் அவரது பெயர் கைவிடப்பட்டது. பசவண்ணரும், அக்கா மகாதேவியும் பிறந்த புண்ணிய பூமி கர்நாடகம். ஆனால், மாநில வரலாற்றிலேயே முதன்முறையாக, ஒரு பெண் அமைச்சர் கூட இல்லாமல் சட்டசபை கூட்டத்தொடர் நடப்பது மிகவும் வருந்தத்தக்கது.
பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி கட்டாயம் என்ற போர்வையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்பாடுகளுக்கு காங்கிரஸ் அரசு பின்புற வழியாக முட்டுக்கட்டை போட முயல்கிறது. முதலமைச்சருக்கும், உள்துறை அமைச்சருக்கும் தைரியம் இருந்தால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பை நேரடியாக தடை செய்து பார்க்கட்டும் என சவால் விடுக்கிறேன். ஆர்.எஸ்.எஸ். எந்த தேசவிரோத செயலில் ஈடுபட்டது என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
உள்துறை அமைச்சர் பிரியாங்க் கார்கே தனது துறைப் பணிகளை கவனிப்பதை விட்டுவிட்டு, எப்போதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை விமர்சிப்பதிலேயே குறியாக இருக்கிறார். அவருக்கு ஆர்.எஸ்.எஸ். மீது அவ்வளவு ஆர்வம் இருந்தால், ராஜினாமா செய்துவிட்டு ‘ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்புத் துறையை’ எடுத்து நடத்தட்டும். ஆர்.எஸ்.எஸ். ஒரு தேசபக்தி அமைப்பு. அதன் மீதான எந்த நடவடிக்கையையும் பா.ஜ.க. சகிக்காது. வால்மீகி வளர்ச்சி கழக ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நாகேந்திராவை மீண்டும் அமைச்சரவையில் சேர்ப்பதை பா.ஜ.க. எதிர்க்கிறது. நாங்கள் அவருடைய சாதியை எதிர்க்கவில்லை. ஊழல் குற்றச்சாட்டுக்கு சாதி சாயம் பூசக்கூடாது. பழங்குடியினர் (எஸ்.டி.) மேம்பாட்டிற்கான நிதியை கையாடல் செய்தது தீவிரமான குற்றச்சாட்டாகும். வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்ட பிறகு அவரை அமைச்சராக்கினால் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. விஜயநகர மாவட்ட பொறுப்பு அமைச்சர் பதவியை ஏற்க மறுத்துள்ள அமைச்சர் ஜமீர் அகமதுவின் முடிவு கண்டிக்கத்தக்கது. சுதந்திர தினத்தன்று மாவட்டத்திற்குச் சென்று மூவர்ணக் கொடியை ஏற்றுவது அமைச்சரின் கடமை, அது விருப்பத்தின் பேரில் நடப்பது அல்ல. கட்சிப்பணி, இடைத்தேர்தல் காரணம் காட்டி அரசுப் பொறுப்பில் இருந்து பின்வாங்குவது சரியல்ல. ஆதாயம் மட்டும் வேண்டும், பொறுப்பு வேண்டாம் என்ற மனப்போக்கு மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆகாது. இவ்வாறு பி.ஒய்.விஜயேந்திரா கூறினார்.













