
மைசூர்: ஆக. 14:
வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) ஊழியர்களான காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரனின் மகள் அனுஸ்ரீ (வயது 26). இவர் மைசூர் மாவட்டம் ஹுணசூர் சுப்பண்ணா லேஅவுட்டில் தங்கி எஸ்.பி.ஐ. வங்கியில் பணியாற்றி வந்தார். வங்கிப் பயிற்சியின் போது, கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கியில் பணிபுரியும் இரட்டி பகுதியைச் சேர்ந்த அமல் என்பவருடன் அனுஸ்ரீக்கு பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியது. இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து, வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில், சம்பவத்தன்று அனுஸ்ரீ தனது பெற்றோர் மற்றும் சகோதரியிடம் போனில் பேசியுள்ளார். பின்னர், காதலன் அமலுடனும் போனில் பேசியபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அனுஸ்ரீ, ஹுணசூரில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அனுஸ்ரீ தற்கொலை செய்துகொண்ட செய்தியை அறிந்த காதலன் அமல், கடும் மனவேதனையில் கேரள மாநிலம் இரட்டியில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒன்றாக வாழ வேண்டிய காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இரு குடும்பத்தினரிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து ஹுணசூர் நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.













