
டெஹ்ரான்: மார்ச் 3-
அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாக குற்றச்சாட்டு உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து, ஈரான் மீது அமெரிக்க – இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் தாக்குதலால் சம்பந்தப்பட்ட மூன்று தேசங்களைத் தாண்டி மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகள் அனைத்துமே பதற்றத்தில் திணறுகின்றன.
ஈரானை அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குவது இது முதன்முறை அல்ல என்றாலும் கூட, இப்போதைய தாக்குதல் ஒரு பயங்கர நிலநடுக்கம் போல் அதிர்வலைகளை, பாதிப்புகளை மத்திய கிழக்கு, வளைகுடா நாடுகள் முழுவதும் பரப்பியுள்ளதால் இந்தத் திணறல் ஏற்பட்டுள்ளது எனலாம்.
பொதுவாகவே வளைகுடா நாடுகள், அவற்றின் எண்ணெய் வளத்தால் சர்வதேச பொருளாதார தலையெழுத்தை நிர்ணயிப்பதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றன. கூடவே, அவற்றின் கலாச்சார பாரம்பரியமும், மத ரீதியிலான அடையாளங்களும் அதனையொட்டிய உள்நாட்டு சச்சரவுகளும் அவற்றை எப்பவுமே ஊடக வெளிச்சத்தில் வைத்திருக்கின்றன.இந்தச் சூழலில் பிப்.28 (சனிக்கிழமை) ஈரானை அமெரிக்கா – இஸ்ரேல் ஒன்றிணைந்து தாக்கத் தொடங்கியது. பதிலுக்கு ஒரே நேரத்தில் 120+ ஏவுகணைகளை ஈரான் ஏவியது. இஸ்ரேல் அயன் டோம் (Iron Dome) என்று அதன் வான் பாதுகாப்பு கவசத்துக்கு பெயர் வைத்து பீற்றிக் கொள்ளும் நிலையில், ஏற்கெனவே அதை ஹமாஸ்கள் பதம்பார்த்தது போக, இப்போது ஈரானும் துவம்சம் செய்து வருகிறது. கிட்டத்தட்ட 35+ ஏவுகணைகளை, இஸ்ரேல் இடைமறிக்கும் ஏவுகணைகளையும் தாண்டி இஸ்ரேலிய இலக்குகளில் இறக்கியுள்ளது ஈரான்.இஸ்ரேல் மட்டுமல்ல குவைத், பஹ்ரைன், சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இராக் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ, கடற்படை தளங்களைக் குறிவைத்தும் ஈரான் தாக்கி வருகிறது. ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேலை தாக்கிய மத்திய கிழக்கு நாடான லெபனான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது.‘சரணடையுங்கள்’ என்று எச்சரிக்கை விடுத்து Epic Fury ஆபரேஷனை ஆரம்பித்த ட்ரம்ப், இந்தத் தாக்குதல் ஒரு வாரம் அல்லது அதற்கும் கூடுதலாக நடக்கலாம் என்று இப்போது சில கால்குலேஷன்களை தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.ஆனால் ஈரான் பதிலடி வீச்சு சற்றும் எதிர்பாராத அளவுக்கு இருக்க போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் ஈரான், அமெரிக்காவுடன் ஓமன் அரசு மூலம் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.அணுசக்தி தொடர்பாக அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளும் இந்தப் பேச்சுவார்த்தையை ஈரான் முன்னெடுப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், “தனது ஆளுமையை நிலை நாட்டிக்கொள்வதற்கான விலையை, அமெரிக்க வீரர்கள் மற்றும் குடும்பங்கள் மீது ட்ரம்ப் சுமத்துகிறார். இன்று, ஈரான் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்கிறது. ஈரானிய ஆயுதப் படைகள் படையெடுப்பைத் தொடங்கவில்லை. தொடங்கியது அமெரிக்கா தான்!. நாங்கள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்” என்று ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அலி லாரிஜானி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இப்படியாக ஈரான் எந்த சமரசத்துக்கும் இடம் கொடுக்காமல் வளைகுடா நாடுகளையும் விட்டுவைக்காமல் தாக்குதல் நடத்தக் காரணம் என்ன?
நாம் ஏற்கெனவே பேசியதுபோல் வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்த முக்கியக் காரணம், அவற்றுக்கும், அமெரிக்க ராணுவத்துக்கும் உள்ள நெருக்கம். அமெரிக்க ராணுவத் தளங்கள் இந்த நாடுகளில் பரவிக் கிடக்கின்றன. அங்கிருந்துகொண்டு பாதுகாப்பு கண்காணிப்பு, ராணுவத் தளவாடங்களைக் கையாளுதல் மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு அமெரிக்காவின் முக்கியப் பங்கு என்ற போர்வையில் தனது கால்களை வலுவாக ஊன்றியுள்ளது அமெரிக்கா.
இதனால் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா – இஸ்ரேலின் ராணுவ பராக்கிரமம் அதிகரித்துள்ளது. இதனை ஈரான் முன்னமே பலமுறை உணர்ந்து வெளிப்படையாகப் பேசியது. அதனால் ஈரான் இப்போது வளைகுடா நாடுகள் மீது நடத்திவரும் இந்தத் தாக்குதல்கள் வெறும் அமெரிக்கா – இஸ்ரேலை பழிவாங்குதலையும் கடந்து விரிவானது, ஆழமானது.


















