
புதுடில்லி: ஆக. 30 –
பீஹாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளுக்கு 58 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பீஹாரில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. அதை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை மேற்கொண்டது.
அப்போது, வேறு இடத்துக்கு குடி பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர்கள் வைத்திருந்தவர்கள் என மொத்தம் 65 லட்சம் பேர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந் நிலையில், இந்தியா டுடே-சி வோட்டர் நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை 58 சதவீதம் பேர் ஆதரித்துள்ள விவரம் தெரிய வந்திருக்கிறது.
நாடு முழுவதும் மக்களின் மனநிலை தற்போது எப்படி உள்ளது? தேர்தல் நடத்தப்பட்டால் எந்த அரசியல் கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என்பதை மையமாக வைத்து இந்தியா டுடே-சி வோட்டர் நிறுவனம் சர்வே ஒன்றை நடத்தி உள்ளது. அதன் முடிவுகளையும் ஒவ்வொரு கட்டமாக வெளியிட்டு வருகிறது.
பீஹார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் பற்றி மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பது பற்றியும் இந்த சர்வேயில் மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.
அவர்களில் 58 சதவீதம் பேர் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, இதன் மூலம் குடிமக்களின் வாக்காளர் உரிமை பாதுகாக்கப்பட்டு உள்ளதாக கூறி உள்ளனர்.