வாயை விட்ட அமெரிக்க அமைச்சர்! ஏற்க மறுக்கும் அரசு?

வாஷிங்டன், செப். 16- இந்தியா மட்டும் எங்களிடம் எல்லாவற்றையும் விற்கிறது. ஆனால் எங்களிடம் இருந்து சோளத்தை வாங்க மறுக்கிறது. இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தகம் ஒரு வழிப்பாதையாக உள்ளது. அதில் இந்தியா தான் லாபமடைகிறது. இதனை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் இந்தியாவுக்கு கடினமான நேரமாக இது இருக்கும்’’ என்று அமெரிக்காவின் வர்த்தகத்துறை அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் மிரட்டி உள்ளார். இதன்மூலம் டிரம்ப் டீம் அமெரிக்காவின் சோளத்தை வாங்க கட்டாயப்படுத்துகிறது. ஆனால் மத்திய அரசு மறுத்து வரும் நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார். இதனால் இருநாடுகள் இடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில் தான் அமெரிக்கா – இந்தியா இடையேயான வர்த்தகம் தொடர்பாக டெல்லியில் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இதற்காக அமெரிக்க பிரதிநிதிகள் டெல்லி வந்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் நம் நாட்டை மீண்டும் மிரட்ட தொடங்கி உள்ளார். இந்தியா, பிரேசில், கனடா உள்ளிட்ட நாடுகளுடன் உறவை வர்த்தகம் என்ற பெயரில் அமெரிக்கா சீர்க்குலைக்கிறதா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு ஹோவர்ட் லுட்னிக் கூறியதாவது: அமெரிக்காவின் சோளத்தை இந்தியா வாங்கியே ஆக வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், இந்தியாவில் 140 கோடி மக்கள் உள்ளனர். ஆனால் சிறிய அளவில் கூட அமெரிக்காவின் சோளத்தை இந்தியா வாங்காமல் உள்ளது. இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு ஒருவழியாக உள்ளது. அமெரிக்காவை அவர்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள். எங்களிடம் அனைத்து பொருட்களையும் விற்று பணம் பார்க்கிறார்கள். ஆனால் எங்களின் பொருட்களை அவர்கள் வாங்குவது இல்லை. இருநாடுகள் இடையே நியாயமான மற்றும் பரஸ்பர வர்த்தகம் வேண்டும். அமெரிக்காவிடம் இருந்து சோளத்தை இந்தியா வாங்க வேண்டும். இல்லாவிட்டால் அமெரிக்காவிற்கான வரியை குறைக்க வேண்டும். இது நடக்காவிட்டால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்வதில் கடினமான நேரத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’’ என்றார்.