வாழ்நாள் சேமிப்பான ரூ.7 கோடியை மோசடி கும்பலிடம் இழந்த முதியவர்

ஹைதராபாத்: ஜனவரி 5 –
தெலுங்கானாவில், ‘டிஜிட்டல் கைது’ என்ற நுாதன மோசடியில் சிக்கிய, 81 வயதான முதியவர், தன் வாழ்நாள் சேமிப்பான, 7.12 கோடி ரூபாயை மோசடிக்காரர் களிடம் இழந்துள்ளார்.
நாட்டில், ‘டிஜிட்டல் கைது’ என்ற பெயரில் சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, மூத்த குடிமக்களை குறிவைத்து இந்த மோசடி நடக்கிறது.
போலீஸ், அமலாக்கத் துறை, சி.பி.ஐ., என்ற பெயரில், ‘மொபைல் போன் வீடியோ’ அழைப்பு மூலம், பொதுமக்களை மிரட்டி, டிஜிட்டல் முறையில் கைது செய்வதாகக் கூறி பணம் பறிக்கப்படுகிறது.
அந்த வகையில், தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதைச் சேர்ந்த 81 வயது முதியவர், தன் வாழ்நாள் சேமிப்பான, 7.12 கோடி ரூபாயை டிஜிட்டல் கைது மோசடியில் இழந்துள்ளார். பாதிக்கப்பட்ட முதியவருக்கு, கடந்த அக்., 27ல், ‘வாட்ஸாப்’பில் ஓர் அழைப்பு வந்தது.
‘கூரியர்’ நிறுவனம் ஒன்றின் பிரதிநிதி என, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபர், மஹாராஷ்டிராவின் மும்பையில் இருந்து தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகருக்கு, முதியவரின் பெயரில் ஒரு பார்சல் அனுப்பப்பட்டதாகவும், அதில் போதைப் பொருட்கள் இருந்ததாகவும் கூறினார்.
இதில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என, முதியவர் கூறினார். இதையடுத்து, மும்பை காவல் துறை அதிகாரி எனக் கூறி பேசிய மற்றொரு நபர், முதியவர் மீது போதைப் பொருள் கடத்தல், பண மோசடி மற்றும் பயங்கரவாத தொடர்பு குற்றச் சாட்டுகளை சுமத்தினார். டிஜிட்டல் கைது செய்துள்ளதாக முதியவரை மிரட்டிய மோசடிக்காரர்கள், நிதி சரிபார்ப்பு என்ற பெயரில், அவரது வங்கிக் கணக்கில் இருந்து முதலில், 20 லட்சம் ரூபாயை திருடினர்.தொடர்ந்து, அக்., 29ல், ‘சிக்னல்’ செயலியை பதிவிறக்கம் செய்ய வைத்து, அதன் மூலம் முதியவர் என்ன செய்கிறார் என்பதை கண்காணித்தனர்.பல நாட்களாக நீடித்த இந்த மிரட்டலால் மன உளைச்சலுக்கு ஆளான முதியவர், தன் வாழ்நாள் சேமிப்பான, 7.12 கோடி ரூபாயை மோசடிக்காரர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றினார். கடந்த டிச., 29ல், வழக்கை முடிக்க கூடுதலாக, 1.2 கோடி ரூபாயை மோசடிக்காரர்கள் கேட்ட போது தான், முதியவருக்கு சந்தேகம் வந்துள்ளது. செய்தித்தாள்களில் இது போன்ற மோசடிகளை படித்து பார்த்த பின், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.