‘விக்சித் பாரத் ஜி ராம் ஜி’ திட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: பிப்ரவரி 17-
மத்திய அரசின் விக்சித் பாரத் ஜி ராம் ஜி வேலைவாய்ப்புத் திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சிவஞான சம்பந்தன் தாக்கல் செய்துள்ள பொதுநலமனுவில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசியஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது.
பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வந்த இந்த திட்டத்தின் பெயரை திடீரென விக்சித் பாரத் ஜி ராம் ஜி என மாற்றம் செய்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள மசோதா நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிச.21-ம் தேதி இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கியுள்ளார். ஏற்கெனவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்துக்கு மத்திய அரசு 90 சதவீதமும், மாநில அரசுகள் 10 சதவீதமும் தங்களது பங்களிப்பு நிதியை வழங்கிவந்தன.
ஆனால், தற்போதுபெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள விக்சித் பாரத் ஜி ராம் ஜி திட்டத்தில் மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசுகள் 40 சதவீதமும் நிதி பங்களிப்பை அளிக்க வேண்டும். ஆனால், யூனியன் பிரதேசங்கள், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும்இமாச்சல பிரதேசத்துக்கு மட்டும் மத்திய அரசு 100 சதவீத நிதி பங்களிப்பு அளித்து வருகிறது.
மேலும், இந்த புதிய திட்டத்தின் மூலமாக கிராமசபைகளுக்கு அரசியலமைப்புச் சட்டம் தந்துள்ளஉரிமையும், அதிகாரமும் முற்றிலுமாக பறிக்கப்பட்டுள்ளது. வேலை நாட்களும் குறைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்துக்காக மத்திய அரசு இந்தாண்டுக்கு ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 282 கோடியை ஒதுக்கியிருப்பதும் போதுமானதாக இல்லை.
125 நாட்கள் வேலை: வழங்கப்பட வேண்டிய நிலையில் இந்த நிதி ஒதுக்கீடு ஆண்டுக்கு 50 நாட்களுக்கு மட்டுமே வேலையளிக்கும் வகையில் உள்ளது. இதனால் கிராமப்புற பெண்கள்தான் அதிகம்பாதிக்கப்படுவர்.
இது பஞ்சாயத்து ராஜ் சட்டத்துக்கும் எதிரானது.
எனவே, இத்திட்டத்தை செயல்படுத்த இடைக்காலத்தடை விதிக்க வேண்டும். அது தொடர்பான அறிவிப்பாணையையும் ரத்து செய்ய கோரினார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.