Home தலைப்பு செய்தி விஜயின் அரசியல் நாகரிகம் -மு.க. ஸ்டாலின் பாராட்டு

விஜயின் அரசியல் நாகரிகம் -மு.க. ஸ்டாலின் பாராட்டு

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதியை தமிழக புதிய முதல்வர் விஜய் சந்தித்தார்

சென்னை,மே.11-
இன்று மாலை தன்னை வந்து சந்தித்த முதல்வர் விஜயை முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி உள்ளார். இது விஜயின் அரசியல் நாகரிகம் என்றும் அவருக்கு அன்பு நிறைந்த வாழ்த்துக்களை கூறினேன் என்றும் முக ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். முதலமைச்சர் விஜய் இன்று முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு சென்று சந்தித்து பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழக சட்டமன்ற தேர்தலின் போது திமுகவையும் அதன் தலைவர்களான முக ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை விஜய் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். திமுக ஒரு தீய சக்தி என்று தொடர்ந்து கூறி வந்தார். அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வந்த நிலையில் இன்று மாலை யாருமே எதிர்பாராத நிலையில் மு க ஸ்டாலினை விஜய் சந்தித்து பேசினார். விஜய் கையை பிடித்து அழைத்துச் சென்று மு க ஸ்டாலின் முதல்வர் விஜய்க்கு பொன்னாடை அணிவித்ததும் பதிலுக்கு விஜய் மு க ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்ததும் அரசியல் நாகரீகமாக கருதப்பட்டு தமிழக வரலாற்றில் புதிய அத்தியாயத்தை தோற்றுவித்தது. உதயநிதி ஸ்டாலினும் முதல்வர் விஜய்யை ஆர தழுவி வரவேற்றார். இந்த நிலையில் மு.க.
ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் வைகோ டாக்டர் அன்புமணி ராமதாஸ் சீமான் ஆகியோரும் விஜய்க்கு பாராட்டு தெரிவித்து உள்ளனர்.