விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்ததில் தவறு இல்லை -வருமான வரித்துறை வாதம்

சென்னை: ஜனவரி 10-
கடந்த 2016-2017 ம் ஆண்டில் நடிகர் விஜய் புலி’ படத்துக்கு வாங்கிய ரூ.15 கோடியை மறைத்து வருமான வரி தாக்கல் செய்ததாக கூறி ரூ.1.50 கோடியை வருமான வரித்துறை அபராதம் விதித்தது. இதனை எதிர்த்தும், அபராதத்தை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த வருமான வரித்துறை அதிகாரிகள் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்ததில் எந்த தவறும் இல்லை என்று பரபரப்பான வாதத்தை முன்வைத்தது. கடந்த 2016-2017 நிதி ஆண்டுக்கான வருமான வரியை நடிகர் விஜய் தாக்கல் செய்தார். அப்போது ரூ.35.42 கோடி வருமானம் ஈட்டியதாக குறிப்பிட்டு இருந்தார். அதனை வருமான வரித்துறையினர் மதிப்பீடு செய்தனர். விஜயின் மீது சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். அப்போது நடிகர் விஜய் தனது உண்மையான வருமானத்தை மறைத்ததாக வருமான வரித்துறை குற்றம்சாட்டியது. அதுமட்டுமின்றி நடிகர் விஜய் தான் நடித்த புலி படத்துக்கு பெற்ற சம்பளத்தில் ரூ.15 கோடியை வருமானத்தில் காட்டவில்லை எனக்கூறி ரூ.1.50 கோடியை அபராதமாக விதித்தது. இதற்கான நோட்டீஸ் 2022ம் ஆண்டு ஜூன் மாதம் விஜய்க்கு வழங்கப்பட்டது. இந்த நோட்டீஸை எதிர்த்தும், ரூ.1.50 கோடி அபராதமாக செலுத்தக்கூறும் வருமான வரித்துறையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் நடிகர் விஜய் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
விஜய் தரப்பில், நடிகர் விஜய்க்கு அபராதம் செலுத்தகோரி 2019ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன்பாகவே வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்து இருக்க வேண்டும். ஆனால் வருமான வரித்துறை காலதாமதமாக 2022ம் ஆண்டு நோட்டீஸ் வழங்கி உள்ளது. இதனால் இந்த அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும்
ஆனால் வருமான வரித்துறை சார்பில் அபராதம் சட்டப்படி தான் விதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். அதன்பிறகு நீதிமன்றம் வருமான வரி தொடர்பாக சம்பந்தப்பட்ட வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகல்களை தாக்கல் செய்யுங்கள் எனகூறினார். இப்படியாக வழக்கு நடந்து வந்த நிலையில் இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. வருமான வரித்துறை சட்டத்தின்படியே விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதம் விதித்ததில் எந்த தவறும் இல்லை’’ என்று வாதிட்டது. இதையடுத்து விஜய் தரப்பு வாதம் வைக்க வேண்டிய நிலையில் வழக்கு விசாரணை ஜனவரி 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது ஏற்கனவே நடிகர் விஜயின் கடைசி படமான ஜனநாயகனுக்கு சென்சார் சான்று வழங்க சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு மேல்முறையீடு வழக்கில் இன்று ரத்து செய்யப்பட்டது.
தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை போடப்பட்டது. அதோடு வழக்கு விசாரணை ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.