பெங்களூரு, டிச. 24- விஜய் ஹசாரே டிராபிக்கான தேசிய ஒருநாள் போட்டி கிரிக்கெட் தொடர் இன்று (டிசம்பர் 24) நாட்டின் பல்வேறு நகரங்களில் தொடங்குகிறது.
உள்ளூர் தொடரான இதில் இந்திய அணிக்காக விளையாடும் அனைத்து வீரர்களும் குறைந்தபட்சம் 2 போட்டிகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என பிசிசிஐ உத்தரவிட்டிருந்தது. இதனால் இந்திய அணியின் சீனியர் வீரர்களும், இளம் வீரர்களும் தங்களது மாநிலங்களை சேர்ந்த அணிகளுக்காக களமிறங்க உள்ளனர். இந்த தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் 15 ஆண்டுகளுக்குப் பிறகு விளையாட உள்ளனர். இது இந்திய கிரிக்கெட்டுக்குள் உருவாகி வரும் அதிகார மையத்துக்கு அவர்கள், இனி விதிவிலக்கல்ல என்பதையே தெளிவுப்படுத்துகிறது. இன்றும் வரும் 26-ம் தேதியும் ஜெய்ப்பூரில் சிக்கிம் மற்றும் உத்தராகண்ட் அணிகளுக்கு எதிராக நடைபெறும் ஆட்டத்திலும் மும்பை அணிக்காக ரோஹித் சர்மா களமிறங்குகிறார்.
அதேவேளையில் மும்பையில் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கருடன் இணைந்து விராட் கோலி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
டெல்லி அணிக்காக களமிறங்கும் அவர், இன்னும் எந்தெந்த போட்டிகளில் விளையாட உள்ளார் என்பதை தெரிவிக்கவில்லை.
எலைட் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள டெல்லி அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று ஆந்திராவுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடத்த கர்நாடக கிரிக்கெட் சங்கம், அம்மாநில அரசிடம் அனுமதி கேட்டிருந்தது.
ஆனால், பாதுகாப்பு காரணங்களை கருதி போட்டிகளை நடத்த அரசு அனுமதிக்கவில்லை. இதையடுத்து இந்த போட்டி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் அமைந்துள்ள மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கிடையே விராட் கோலி நேற்று இரவு பெங்களூரு வந்தடைந்தார். இதனால் அவர், இன்றைய ஆட்டத்தில் களமிறங்கக்கூடும் என ஊகங்கள் எழுந்துள்ளன.


















