டெல்லி, டிச. 16- ஜப்பான், ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் பல நிறுவனங்களில் வாரத்தில் 4 நாட்கள் வேலையும், மீதமுள்ள 3 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை வழங்கும் முறை நடைமுறையில் உள்ளது. இந்த பார்முலாவை நம் நாட்டிலும் கொண்டு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான அம்சம் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட புதிய தொழிலாளர் சட்டத்தில் உள்ளதாக மத்திய தொழிலாளர் அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இதனால் விரைவில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் நடைமுறை நம் நாட்டில் அறிமுகமாக உள்ளதா? என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நம் நாட்டில் உள்ள ஐடி நிறுவனங்களில் வாரத்தில் 5 நாட்கள் வேலையும், சனி, ஞாயிறு விடுமுறையும் வழங்கப்பட்டு வருகிறது. பிற தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள், பணியாளர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் வேலை நடைமுறை உள்ளது. அதேவேளையில் பல வெளிநாடுகள் தங்களின் ஊழியர்களின் ‛வொர்க் லைஃப்’ பேலன்ஸ் முறையை பின்பற்றி வருகின்றன. அந்த வகையில் ஜப்பான், ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் வாரத்தில் 4 நாட்கள் வேலையும், 3 நாட்கள் ஊழியர்களுக்கு விடுமுறையும் வழங்கப்பட்டு வருகிறது. ஊழியர்கள் தங்களின் குடும்பத்துடன் நேரம் செலவழிக்கும் வகையில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இது அந்த நாடுகளில் நல்ல ரிசல்டை கொடுத்துள்ளன.
இந்த நடைமுறை இந்தியாவிலும் சாத்தியமா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. இதற்கிடையே தான் சமீபத்திய தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் வழியாக, நம் நாட்டிலும் வாரம் 4 நாட்கள் வேலை – 3 நாட்கள் விடுமுறை முறையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது நவம்பர் 21ம் தேதி புதிதாக 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை (New Labour Code) மத்திய அரசு இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. தொழிலாளர் ஊதியச் சட்டம் 2019, தொழில்துறை தொடர்புகள் சட்டம் 2020, சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020 மற்றும் தொழில்முறைப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிடச் சூழல் சட்டம் 2020 உள்ளிட்டவற்றை மத்திய அரசு அமல்படுத்தியது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர் சட்டங்கள் ஒன்றிணைத்து இந்த புதிய தொழிலாளர் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் பல்வேறு அம்சங்கள் உள்ளன.















