
குவெட்டா: பிப்ரவரி 17-
பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 17 வீரர்களை சிறைபிடித்துள்ளதாகவும், அவர்களில் 10 பேரை விடுவித்துவிட்டு, எஞ்சிய 7 பேரை விடுவிக்க கைதிகள் பரிமாற்றத்திற்கு ஒரு வாரம் காலக்கெடு விதித்துள்ளதாகவும் பலூச் விடுதலை ராணுவம் (பி.எல்.ஏ.) நேற்று தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பின் ஊடகப் பிரிவான ‘ஹக்கல்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “சிறைபிடிக்கப்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தினரில் 10 பேர் பலூச் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், அவர்கள் உள்ளூர் காவல் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் என்பதாலும், அவர்களுக்கு உரிய எச்சரிக்கை விடுக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலப்பரப்பின் எதார்த்த சூழல் மற்றும் பலூச் மக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்படாத எஞ்சிய 7 பேரும் பாகிஸ்தான் ராணுவத்தின் வழக்கமான பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மீது ‘பலூச் தேசிய நீதிமன்றத்தில்’ விசாரணை நடத்தப்பட்டது.
அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியது, பலூச் இளைஞர்கள் மாயமானதில் உடந்தையாக இருந்தது மற்றும் இனப்படுகொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. விசாரணையின் போது அவர்கள் தரப்பு விளக்கத்தைப் பதிவு செய்த பின்னரே, அவர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது.


















