வெனிசுலாவில் இருந்து இந்தியா வரும் கச்சா எண்ணெய்

டெல்லி: பிப்ரவரி 25-
அமெரிக்காவின் கண்ட்ரோலில் வெனிசுலா வந்த பிறகு, அந்நாட்டில் இருந்து செய்யப்படும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதற்கிடையே 3 மிகப் பெரிய சரக்கு கப்பல்கள் வெனிசுலாவில் இருந்து இந்தியாவுக்கு வந்து கொண்டு இருக்கிறதாம். பல இந்திய நிறுவனங்கள் வெனிசுலா கச்சா எண்ணெய்யை வாங்க ஆரம்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் வெனிசுலாவில் இறங்கிய அமெரிக்கா, அந்நாட்டு அதிபர் மதுரோவை சிறைபிடித்தது. அதன் பிறகு வெனிசுலா கச்சா எண்ணெய்யை அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் என டிரம்ப் அறிவித்தார். அதைத் தொடர்ந்து வெனிசுலா மீது போடப்பட்ட பல்வேறு வர்த்தகத் தடைகளையும் டிரம்ப் முடிவுக்குக் கொண்டு வந்தார்
இந்தியா- வெனிசுலா இதற்கிடையே வெனிசுலாவில் இருந்து இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வெனிசுலா- அமெரிக்கா டீலை தொடர்ந்து, இந்த வர்த்தகம் தொடங்கியுள்ளது. இப்போது சுமார் 2 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய்யைச் சுமந்து செல்லும் பெரிய டேங்கர்கள் இந்தியக் கடற்கரையை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்ய VLCC எனப்படும் மிகப் பெரிய கச்சா எண்ணெய்க் கப்பல்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் விநியோகம் அதிகரிக்கும் என்றும் ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.. மிக பெரியவை சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ராட்சச கப்பல் போக்குவரத்துக்குப் பயன்படும் VLCC உள்ளே வந்துள்ளது, வெனிசுலா ஏற்றுமதி மீண்டுள்ளதையே காட்டுகிறது. இவை சூயஸ்மாக்ஸ் (Suezmax) ரகக் கப்பல்களைக் காட்டிலும் சுமார் இரு மடங்கும், ஆஃப்ரேமாக்ஸ் (Aframaxes) ரக கப்பல்களைக் காட்டிலும் கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிக கொள்ளளவைக் கொண்டுள்ளன. இதனால் சரக்கை எடுத்துச் செல்ல ஆகும் செலவுகளும் குறையும், ஏற்றுமதியும் வேகமடையும்.
சுமார் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவின் ஷெவ்ரான் நிறுவனம் வெனிசுலா கச்சா எண்ணெய்யை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்றுள்ளது. அதேபோல விட்டல் நிறுவனத்திடமிருந்தும் 2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை ரிலையன்ஸ் வாங்குகிறது. இது தவிர PDVSAவிடம் இருந்து நேரடியாக வாங்குவதையும் ரிலையன்ஸ் ஆராய்ந்து வருகின்றது.