
சிக்கமகளூர்: பிப்ரவரி 16-
கொப்பா தாலுகாவில் உள்ள ஜெயபுராவின் பசரிகட்டே கிராமத்தில், ஏழாம் வகுப்பு வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். அதிகம் டிவி பார்க்காதே என்று அம்மா திட்டியதால் இவர் இந்த துயர முடிவை எடுத்துள்ளார்.
பசரிகட்டே கிராமத்தைச் சேர்ந்த சுப்ரிதா (13) என்ற மாணவி, டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கிராமத்தில் உள்ள ஒரு மொபைல் கடையில் வேலைக்குச் சென்றிருந்த அவரது தாயார் மதிய உணவிற்கு வீடு திரும்பினார். அவரது தாயார் மதிய உணவு பரிமாறியபோது, சுப்ரிதா டிவி பார்த்துக் கொண்டே தனது தட்டை கீழே தவறவிட்டார். தட்டில் இருந்த சோறு குழம்பு எல்லாம் கீழே கொட்டியது. இதனால் தாய் சத்தம் போட்டு திட்டி இனிமேல் இவ்வளவு வெறித்தனமாக டிவி பார்க்காதே குறைவாக பார் என்று கூறிவிட்டு வேலைக்கு சென்று விட்டார்.
அவரது தாயார் வேலைக்குச் சென்ற சிறிது நேரத்திலேயே, சிறுமி சுப்ரிதா, தனது வீட்டின் கூரையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விஷயம் அவரது தாயாருக்குத் தெரிய வந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார், ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி இறந்தார்.
இறந்த சிறுமியின் தாய் சரோஜா, தனது கணவரிடமிருந்து பிரிந்து வசித்து வந்தார். இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர். மூத்த மகள் தனது தாயாருடன் இருந்தார், இளைய மகள் தனது தந்தையாருடன் இருந்தார். ஜெயபுரா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.















