வெறுப்பு அரசியலை துாண்டும் ராகுல்; மன்னிப்பு கேட்க அமித் ஷா வலியுறுத்தல்

குவஹாத்தி: ஆக. 30-
பீஹாரில், ‘இண்டி’ கூட்டணி கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மறைந்த அவரது தாயார் பற்றி அவதுாறாக பேசப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘’வெறுப்பு அரசியலை துண்டும் ராகுல், மன்னிப்பு கேட்க வேண்டும்,’’ என, வலியுறுத்தி உள்ளார்.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தற்போதே தேர்தல் பிரசாரம் களைகட்டி உள்ளது. பிரதான எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை ‘இண்டி’ கூட்டணியின் அங்கமாக போட்டியிடுகின்றன.
காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர், ‘வாக்காளர் உரிமை யாத்திரை’ என்ற பெயரில் பீஹார் முழுதும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். தர்பங்கா மாவட்டத்தில், இண்டி கூட்டணியின் வாக்காளர் உரிமை யாத்திரை சமீபத்தில் நடந்தது.
அதில் பேசிய காங்., நிர்வாகி ஒருவர், பிரதமர் மோடி மற்றும் மறைந்த அவரது தாயார் பற்றி மிகவும் தரக்குறைவாகப் பேசினார். மேடையில், ராகுல், பிரியங்கா, தேஜஸ்வி ஆகியோரது புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதற்கு பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கும் வடகிழக்கு மாநிலமான அசாமின் குவஹாத்தியில், நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில், அக்கட்சி மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசியதாவது: பீஹாரில், இண்டி கூட்டணி கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் மறைந்த அவரது தாயார் பற்றி மிகவும் அருவருக்கத்தக்க வகையில் காங்கிரசார் பேசி உள்ளனர்.