வெற்றிக்கு வாழ்த்து சொன்ன தோனி

சென்னை, ஜன. 22- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கடந்த ஆண்டு தங்களது நீண்ட கால கனவான ஐபிஎல் கோப்பையை வென்று வரலாற்றில் இடம்பிடித்தது. இந்நிலையில், பெங்களூரு அணியின் இந்த வரலாற்று வெற்றி குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் தோனி தற்போது மனம் திறந்து பாராட்டியுள்ளார். பெங் களூரு அணி தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்று 8 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தோனியின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. சமீபத்தில் இண்டிகோ விமான நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் தோனி கலந்து கொண்டார். அப்போது அங்கிருந்த ரசிகர் ஒருவர், 2025 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கோப்பையை வென்றது குறித்து தோனியிடம் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த தோனி, “நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு அங்கம். அதனால் சிஎஸ்கேவைத் தவிர வேறு எந்த அணியும் ஐபிஎல் கோப்பையை வெல்வதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால், பெங்களூரு அணியின் இந்த வெற்றி நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டது. அவர்கள் உண்மையிலேயே மிகச்சிறப்பாக விளையாடினார்கள். அவர்களுக்கு எனது பெரிய வாழ்த்துக்கள்” என்று கூறினார். மேலும் பேசிய அவர், “எந்த ஒரு போட்டித் தொடராக இருந்தாலும், அதில் நாம் பங்கேற்கும்போது நம் அணி தான் வெற்றிபெற வேண்டும் என்று நினைப்போம். ஆனால் எல்லா நேரங்களிலும் முடிவுகள் நமக்குச் சாதகமாக அமைவதில்லை” என்றும் தெரிவித்தார்.