வெற்​றியை தொடரும் முனைப்​பில் இந்திய அணி

விசாகப்​பட்​டினம், ஜன. 28- இந்​தியா – நியூஸிலாந்து அணி​கள் இடையி​லான 4-வது டி20 கிரிக்​கெட் போட்டி விசகாப்பட்டினத்​தில் உள்ள டாக்​டர் ஒய்​.எஸ். ராஜசேகர ரெட்டி ஏசிஏ-​விடிசிஏ மைதானத்​தில் இன்று இரவு 7 மணிக்கு நடை​பெறுகிறது. இரு அணி​கள் இடையி​லான 5 ஆட்​டங்​கள் கொண்ட டி20 தொடரில் நாக்​பூரில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் 48 ரன்கள் வித்​தி​யாசத்​தி​லும், ராய்ப்​பூரில் நடை​பெற்ற 2-வது ஆட்​டத்​தில் 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தி​லும், குவாஹாட்டி​யில் நடை​பெற்ற 3-வது ஆட்​டத்​தில் 8 விக்கெட்​கள் வித்​தி​யாசத்​தி​லும் இந்​திய அணி வெற்றி பெற்​றிருந்​தது. இதன் மூலம் தொடரை 3-0 என இந்​திய அணி தன்​வசப்​படுத்​தி​யிருந்​தது. இந்​நிலை​யில் 4-வது ஆட்​டம் விசாகப்​பட்​டினத்​தில் இன்று இரவு நடை​பெறுகிறது. 3-வது போட்​டி​யில் 154 ரன்​கள் இலக்கை விரட்​டிய இந்​திய அணி 10 ஓவர்​களில் வெற்றி கண்​டிருந்​தது. தொடக்க வீர​ரான அபிஷேக் சர்மா 20 பந்துகளில், 68 ரன்​களை விளாசி மிரட்​டி​னார். அவருக்கு உறு​துணை​யாக விளை​யாடிய கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ் 26 பந்​துகளில் 56 ரன்​கள் விளாசி​யிருந்​தார். இஷான் கிஷனும் தனது பங்​குக்கு 13 பந்​துகளில் 28 ரன்​கள் சேர்த்திருந்​தார். இவர்​களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த செயல்​திறன் வெளிப்​படக்​கூடும். அதேவேளை​யில் தொடக்க வீர​ரான சஞ்சு சாம்​சன் நடப்பு தொடரில் இது​வரை பெரிய அளவில் ரன்​கள் குவிக்​க​வில்​லை. அவர் முறையே 10, 6, 0 ரன்​களில் ஆட்​ட​மிழந்து இருந்​தார். டி 20 உலகக் கோப்பை நெருங்கி வரு​வ​தால் அவரது பார்ம் கவலை அளிக்​கும் வகை​யில் உள்​ளது. தற்​போது நியூஸிலாந்​துக்கு எதி​ரான தொடரை வென்​று​விட்​ட​தால் இன்​றைய ஆட்​டத்​தில் சஞ்சு சாம்​சன் எந்​த​வித நெருக்​கடி​யும் இல்​லாமல் விளை​யாட முடி​யும். இதனால் அவர், பார்​முக்கு திரும்​புவதற்கு இன்​றைய ஆட்​டத்தை சிறந்த முறை​யில் பயன்​படுத்​திக் கொள்ள முயற்​சிக்​கக்​கூடும். இதுஒரு​புறம் இருக்க இந்​திய அணி​யின் பிர​தான சுழற்​பந்து வீச்​சாளர்​களான குல்​தீப் யாதவ், வருண் சக்​ர​வர்த்தி ஆகியோர் நடப்பு தொடரில் எந்​த​வித தாக்​கத்​தை​யும் ஏற்படுத்​தாதது சுணக்​கத்தை ஏற்​படுத்தி உள்​ளது.