
கொழும்பு, பிப் 25- ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் குரூப் 2-ல் இடம் பெற்றுள்ள இலங்கை – நியூஸிலாந்து அணிகள் இன்று இரவு 7 மணிக்கு கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில் மோதுகின்றன. இலங்கை அணி அரை இறுதிக்கு முன்னேற வேண்டுமானால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் களமிறங்குகிறது. தசன் ஷனகா தலைமயிலான இலங்கை அணி சூப்பர் 8 சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியிடம் 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. அந்த ஆட்டத்தில் 147 ரன்கள் இலக்கை துரத்த முடியாமல் இலங்கை அணி 95 ரன்களுக்கு சுருண்டிருந்தது. மேலும் இலங்கை அணியின் பேட்ஸ்மேன்களின் சில ஷாட் தேர்வுகளும் மோசமாக அமைந்திருந்தன. சொந்த மைதானத்தில் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு அவர்கள், தங்களது ஆட்ட வியூகத்தை மாற்றிக் கொள்ளாததன் விளைவாக தோல்வியை சந்தித்தனர். ஏனெனில் இந்தியாவில் உள்ள ஆடுகளங்களைவிட இலங்கையில் உள்ள ஆடுகளங்களில் ரன்கள் குவிப்பது கடினமாக உள்ளது. மேலும் ஆடுகளத்தின் எல்லைக்கோடுகள் பெரியது என்பதால் இங்கு சிக்ஸர்கள் விளாசுவதும் எளிதானது இல்லை. இதனால் கடந்த ஆட்டத்தில் செய்த தவறுகளில் இருந்து இலங்கை அணி வீரர்கள் பாடம் கற்றுக்கொண்டு வெற்றி பாதைக்கு திரும்பவதற்கு முயற்சி செய்யக்கூடும். பேட்டிங்கில் அந்த அணியில் பதும் நிசங்கா சிறந்த பார்மில் உள்ளார். பந்துவீச்சில் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான துனித் வெல்லாலகே சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதேவேளையில் தில்ஷான் மதுசங்கா உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்களும் நெருக்கடி கொடுப்பவர்களாக திகழ்கின்றனர். மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூஸிலாந்து அணி சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தான் அணியுடன் மோத இருந்த ஆட்டம் மழை காரணமாக ரத்தாகியிருந்தது. பேட்டிங்கில் தொடக்க வீரர்களான பின் ஆலன், டிம் ஷெய்பர்ட் ஆகியோர் அதிரடியாக விளையாடும் திறன் கொண்டவர்கள். ரச்சின் ரவீந்திரா, கடைசி லீக் ஆட்டத்தில் கனடாவுக்கு எதிராக அரை சதம் அடித்து பார்முக்கு திரும்பியிருந்தார். கிளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னர், மார்க் சாப்மேன் ஆகியோரும் அதிரடியில் மிரட்டக்கூடியவர்கள். சுழலில் மிட்செல் சாண்ட்னர், இஷ்சோதி, கிளென் பிலிப்ஸ் பலம் சேர்க்கக்கூடும். வேகப்பந்து வீச்சில் லாக்கு பெர்குசன், ஜேக்கப் டஃபி, மேட் ஹென்றி உள்ளிட்டோர் இலங்கை பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும். இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வி அடைய நேரிட்டால் அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழக்க நேரிடும். இதனால் அந்த அணி கூடுதல் கவமுடன் செயல்படக்கூடும்.


















