
சென்னை: பிப். 27- 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டி தொடங்குவதற்கு முன்பாக, இந்திய அணி வீரர்கள் அனைவரும் அகமதாபாத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியை மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து வந்தனர். இந்திய அணியின் அரையிறுதிப் பாதை சுலபமாக அமைய தென்னாப்பிரிக்காவின் வெற்றி கட்டாயமாக இருந்ததால், இந்திய ரசிகர்களைப் போலவே வீரர்களும் அந்தப் போட்டியின் முடிவை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்த நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தனது தந்தையுடன் சென்னை ஹோட்டல் அறையில் அமர்ந்து இந்தப் போட்டியைப் பார்த்த சுவாரஸ்யமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அப்பாவுக்கு வந்த கோபம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான வெற்றிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஷ்தீப் சிங், “நாங்கள் அந்தப் போட்டியை முழுமையாகப் பார்க்கவில்லை என்றாலும், அது மிகவும் விறுவிறுப்பாகச் சென்றது. எனது குடும்பத்தினர் என்னுடன் ஹோட்டல் அறையில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்கள் சிக்ஸர் அடிக்கும்போதெல்லாம் எனது தந்தை கடும் கோபமடைந்தார். தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களைப் பார்த்து, ‘நீங்கள் எல்லாம் என்னதான் செய்து கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கூறி கெட்ட வார்த்தைகளால் திட்டத் தொடங்கிவிட்டார். நான்தான் அவரைச் சமாதானப்படுத்தி, அவ்வளவு பதற்றமடைய வேண்டாம் என்று கூறினேன். கிரிக்கெட்டை ரசியுங்கள், தென்னாப்பிரிக்கா வெற்றி பெற தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள் என்று அவரிடம் கூறினேன்” எனச் சிரித்தபடியே தெரிவித்தார். இந்தியாவுக்கு உதவி செய்த தென்னாப்பிரிக்கா அகமதாபாத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு கட்டத்தில் 83 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர் ஜேசன் ஹோல்டர் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்டு ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் அந்த அணி 176 ரன்களை எட்டியது. ஆனால், இலக்கைத் துரத்திய தென்னாப்பிரிக்க அணி 16.1 ஓவர்களிலேயே மிக எளிதாக வெற்றி பெற்றது. எய்டன் மார்க்ரம் 82 ரன்களும், குயின்டன் டி காக் 47 ரன்களும் குவித்து அணியின் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தனர். இது குறித்துப் பேசிய அர்ஷ்தீப் சிங், “தென்னாப்பிரிக்க அணி மிகச் சிறப்பாக விளையாடியது. எங்கள் அரையிறுதி வாய்ப்பை எங்கள் கைகளிலேயே வைத்துக்கொள்ள அவர்கள் உதவியுள்ளார்கள். அதற்காக அவர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஒருவேளை இறுதிப்போட்டியில் அவர்களைச் சந்திக்க நேர்ந்தால் நிச்சயம் வீழ்த்த முயற்சிப்போம்” என்று நகைச்சுவையாகக் கூறினார். இரட்டிப்பு மகிழ்ச்சி தென்னாப்பிரிக்க அணியின் வெற்றி இந்திய அணிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து சென்னை சேப்பாக்கத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராகக் களமிறங்கிய இந்திய அணி 250 ரன்களுக்கு மேல் குவித்து, 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் பேட்டிங்கில் அபிஷேக் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா அரைசதம் கடந்து அசத்தினர்.


















