பெங்களூரு, டிச. 10: வேற்று மொழி பயன்பாட்டை முதலில் நாம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று இலக்கிய பேச்சாளர் தமிழ்ச்சுடர் தாமல் கோ.சரவணன் தெரிவித்தார்.
கர்நாடக தமிழ் பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் நடந்து வரும் 4வது தமிழ் புத்தக திருவிழாவில் 5வது நாளான செவ்வாய்க்கிழமை (டிச.9) காலை கன்னியாக்குமரி பேபி ஜெயக்குமார் குழுவினரின் அதிசயம் அல்ல, அறிவியல் தந்திரம் தலைப்பிலான மாயவித்தை காட்சி 2வது நாளாக நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து வெற்றி அரங்கம் நிகழ்ச்சியில் கர்நாடக திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான போர்முரசு கதிரவன், சித்திரம் பேசுதடி, கேள்விக்கு என்ன பதில், படம் பார்த்து கதை சொல் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்கள் பரிசு வழங்கினார்.
மாலை 5 மணிக்கு பாவரங்கம் நடைபெற்றது. முனைவர் தேவி ராஜேஷ் தலைமையிலான பாவரங்கத்தில் மா.கார்த்தியாயினி, ஆதித்யா புகழேந்தி, மா.வித்யா, வி.அனுன்சியா, சி.சுதா, மாங்கனி சந்தோஷ் சரளா புருஷோத்தமன், நந்தினி ஆகியோர் கவிதை பாடினர்.
மகளிர் மட்டுமே பங்கேற்ற இந்த பாவரங்கத்தில் சமூக வேற்றுமை, இளைய தலைமுறையின் இன்றைய நிலை, இயற்கை விவசாயம், தமிழ்க்கல்வி, இளைஞர்களின் இன்றைய போக்கு ஆகியவை கவிதைப் பொருளாக அமைந்து, பாவரங்கம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இதனையடுத்து நடைபெற்ற உள்ளமெலாம் தமிழ், இல்லமெலாம் தமிழ் என்ற தலைப்பிலான சிந்தைகளம் நிகழ்ச்சியில் மொழியியல் ஆய்வறிஞர் ம.சோ.விக்டர், இலக்கியப் பேச்சாளர் தமிழ்ச்சுடர் தாமல் கோ.சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். இதற்கு வள்ளல் பெருமாள் வரவேற்புரையும், ஆதித்யா புகழேந்தி நன்றியுரையும் ஆற்றினர்.
இதில் தாமல் கோ.சரவணன் பேசியது: உள்ளமெலாம் தமிழ், இல்லமெலாம் தமிழ் என்ற அருமையான தலைப்பு. இரண்டும் நமக்கு அவசியமானது. இல்லத்தில் தமிழ் இல்லை என்றால் உங்கள் உள்ளத்திலும் தமிழ் இருக்காது. திருவள்ளுவர் இருந்தப்போது பேசிய தமிழ் சொற்கள் இப்போது பேசப்படுவதில்லை என்று ஆய்வறிஞர் ம.சோ.விக்டர் ஐயா கூறினார்.ஆனால் ஆச்சரியமான விஷயம் திருவள்ளுவர், ஒளவயாரும், இளங்கோவடிகளும் இருந்தபோது பேசிய சில சொற்கள், இன்றும் நம்மில் புழக்கத்தில் உள்ளது. கூலி, ஊதியம், தாடி ஆகிய சொற்களை கூறலாம்.
திருக்குறளில், தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் எனக்கூறப்பட்டுள்ளது. அதே போல சிலப்பதிகாரத்தில் நயன் இல் முழுகின் நரை முடி தாடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக தமிழ்ச் சொல்லை நமது வீடுகளில் பயன்படுத்துவதில்லை. பெரும்பாலான சொற்கள் ஆங்கிலம் கலந்து பயன்படுத்தப்படுகின்றன. தமிழில் அத்தனை எழுத்துகளும், சொற்களும் உயிரோடு உள்ள போது வேற்று மொழியை பயன்படுத்துவதை நாமும், நமது பிள்ளைகளும் முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
இல்லங்களில், உள்ளங்களில் மட்டும் தமிழ் இருந்தால் போதாது. உங்கள் விரல்களிலும் தமிழ் இருக்க வேண்டும். காரணம், எழுத்துவதை நிறுத்திவிட்டு ஒரு மொழி பேசினால் அந்த மொழி காணாமல் போய்விடும். எனவே விரல்களில் தமிழ் இருக்க வேண்டும் என்றார்.















