பாட்னா: செப். 19- பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். இந்த உதவி, முதலமைச்சர் நிச்சயம் சுய உதவிப் படிகள் திட்டம் கீழ் வழங்கப்படும். இது பட்டதாரிகள் வேலை தேடும் வரை, அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகளுக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் என பீகார் அரசு தெரிவித்திருக்கிறது. முன்னதாக, இத்திட்டம் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. தற்போது, 20 முதல் 25 வயதுக்குட்பட்ட கலை, அறிவியல் மற்றும் வணிக பட்டதாரிகளும் இதற்குத் தகுதி பெறுவார்கள். அவர்கள் வேலை இல்லாமல், சுய தொழில் செய்யாமல், அல்லது மேல்படிப்பில் சேராமல் இருந்தால் மட்டுமே இந்தப் பலனைப் பெற முடியும். இந்த அறிவிப்பு, பீகாரில் குறிப்பாக படித்த இளைஞர்களிடையே உள்ள வேலையின்மை பிரச்சனையை தீர்க்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது. நிதீஷ் குமார் கூறுகையில், 2005 இல் தனது அரசு பதவியேற்றது முதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு தொடர்ந்து முன்னுரிமை கொடுத்து வந்திருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரசு மற்றும் தனியார் துறைகளில் 10 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் நாங்கள் இலக்காக நிர்ணயித்துள்ளோம் என கூறியுள்ளார். “இந்த நிதியுதவி இளைஞர்களுக்குப் பயிற்சி பெறவும், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகவும் உதவும் என்று நம்புகிறேன். இதன் மூலம் அவர்கள் வலுவான எதிர்காலத்தை உருவாக்கிக்கொண்டு மாநிலத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பார்கள்,” என்று நிதிஷ்குமார் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.















