
மும்பை, நவ. 14- ஐபிஎல் கிரிக்கெட்டில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, டிரேடிங் முறையில் குஜராத்தை டைட்டன்ஸ் அணியின் ஷெர்பான் ருதர்போர்ட் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஷர்துல் தாக்குரை வாங்கியுள்ளது. எதிர்வரும் ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கு முன்னதாக வரும் டிச.16-ம் தேதி வீரர்களுக்கான மினி ஏலம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், 10 ஐபிஎல் அணிகளும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் விவரத்தை சனிக்கிழமை (நவ.15) அறிவிக்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பாக ஐபிஎல் அணிகள் டிரேடிங் முறையாக வீரர்களை மாற்றிக் கொள்வும், வாங்கவும் முடியும்.
அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி, கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய ஷெர்பான் ருதர்போர்டை ரூ.2.6 கோடிக்கு வாங்கியுள்ளது. மேற்கு இந்தியத் தீவுகளை சேர்ந்த ஷெர்பான் ருதர்போர்ட், கடந்த சீசனில் 13 ஆட்டங்களில் 291 ரன்கள் எடுத்திருந்தார். இதற்கு முன்பு டெல்லி (2019), மும்பை (2020), பெங்களூரு (2022), கொல்கத்தா (2024) அணியில் அவர் இடம்பெற்றிருந்தார். தற்போது மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவர் திரும்பி உள்ளார். இடது கை பேட்ஸ்மேனான ஷெர்பான் ருதர்போர்ட், மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்காக 44 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 23 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 397 ரன்கள் எடுத்துள்ளார். ஷர்துல் தாக்குர்: இந்திய ஆல்ரவுண்டரான ஷர்துல் தாக்குரையும் மும்பை இந்தியன்ஸ் அணி டிரேடிங் முறையில் வாங்கியுள்ளது. கடந்த சீசனில் லக்னோ அணிக்காக அவர் விளையாடி இருந்தார். அவர் ரூ.2 கோடிக்கு மும்பை அணி பெற்றுள்ளது. இதே தொகைக்காக அவர் கடந்த சீசனில் லக்னோ அணியில் விளையாடி இருந்தார்.


















