ஷிவம் துபேவுக்கு பாராட்டு… சாம்சனுக்கு இடித்துரையா? – கம்பீரின் விஷமம்

கொல்கத்தா, மார்ச் 3- மே.இ.தீவுகளுக்கு எதிரான கிட்டத்தட்ட காலிறுதி போன்ற நாக்-அவுட் ரகப் போட்டியில் சஞ்சு சாம்சன் அதியற்புதமாக ஆடி 97 ரன்களை எடுத்து வெற்றிக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார். ஷிவம் துபே அந்த 2 பவுண்டரிகள் மூலம் வெற்றிக் கோட்டைக் கடந்தார். இதில் ஷிவம் துபேயின் அந்த 2 பவுண்டரி சஞ்சு சாம்சனின் 97-க்குச் சமம் என்று பேசியுள்ளார் கம்பீர். வெளிப்பார்வைக்கு ஷிவம் துபேயின் சிறு பங்களிப்பைக் கூட ஆதரிக்கும் பெரியமனசுக்காரர் என்ற பிம்பம் கம்பீரைப் பற்றிக் கட்டமைக்கப்படலாம். ஆனால் இன்னொரு புறம் சஞ்சுவின் 97 ரன்களை மறைமுகமாக இடித்துரைப்பது அதை எப்படியாவது மட்டம் தட்டுவது என்ற குரூர எண்ணம்தான் உள்ளார்ந்து இருப்பதை உணர்த்துகிறது. இதே காட்சியை மாற்றிப் பார்ப்போம் 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டி கம்பீர் அவர் வாழ்நாளின் சிறந்த இன்னிங்ஸை இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆடி 97 ரன்களை எடுத்தார். ஆனால் தோனியின் 93 இன்னிங்ஸும் அந்த வெற்றி சிக்ஸும் ஐகானிக் ஆகி மக்கள் மத்தியில் நிரந்தர folklore ஆக, மூலப்படிவமாகப் படிந்து விட்டது. உண்மையில் கம்பீர் இன்னிங்ஸ்தான் அப்போது பெரிதாகப் பேசப்பட்டது, தோனி ஒரு ஸ்டார் என்பதாலும் அவர் கேப்டன் என்பதாலும் அவர் இன்னிங்ஸ் விதந்தோதப்பட்டது. தோனி இன்னிங்ஸ் இல்லையென்றால் கம்பீரின் 97 எடுபட்டிருக்காது என்று யாரும் அப்போது கூறியதாகத் தெரியவில்லை. இப்போது அதே லாஜிக் படி பார்த்தால் அன்று தோனி பேசப்படாமல் கம்பீர் பேசப்பட்டிருந்தால் வேறு சில குரல்கள் தோனியின் வெற்றி சிக்ஸ் இல்லையென்றால் கம்பீரின் 97 என்பது பேசப்பட்டிருக்காது என்று கூறினால் கம்பீர் ஏற்றுக் கொள்வாரா என்பதே நம் கேள்வி. ஆனால் அப்படியெல்லாம் நடக்காமலேயே தோனி மீது தன் வெறுப்புணர்வை அவ்வப்போது வெளிப்படையாகவும் இடக்கரடக்கலாகவும் கக்கிக் கொண்டிருப்பவர்தான் இந்தக் கம்பீர். கம்பீர் அன்று ஷிவம் துபே பற்றிக் கூறும்போது, “என்னைப் பொறுத்தவரை ஷிவம் துபேயின் அந்த 2 பவுண்டரிகள் சஞ்சுவின் 97 போன்றே முக்கியமானது.” இதுவரை சரி, ஆனால் இதற்குப் பிறகு சொன்னது விஷமத்தனம், “துபே அந்த 2 பவுண்டரிகளை அடிக்கவில்லையெனில் சஞ்சுவின் 97 ரன்கள் பற்றி பேசிக்கூட இருக்க மாட்டீர்கள்.” என்கிறார்.