
வர்ஜீனியா: நவம்பர் 20-
வங்கதேசத்தில் கலவரங்களை ஏற்படுத்த ஜோ பைடன் தலைமையிலான முந்தைய அமெரிக்க அரசு நிதி அளித்தது என்று வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வசீத் குற்றம்சாட்டியுள்ளார்.வங்கதேசத்தில் கடந்த ஆண்டு அரசுக்கு எதிராக நிகழ்ந்த கலவரங்களை தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். கலவரத்தை ஒடுக்கியபோது ஏற்பட்ட வன்முறை மற்றும் உயிரிழப்பு குற்றங்களுக்காக அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அண்மையில் மரண தண்டனை விதித்தது. பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் ஆட்சியில் இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியாவிடம் யூனுஸ் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் வசித்து வரும் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வசீத் கூறியதாவது: வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த ஜோ பைடன் தலைமையிலான முந்தைய அமெரிக்க அரசு மில்லியன் கணக்கில் டாலர்களை செலவிட்டுள்ளது.இதை இப்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார்.
ஆனால் ட்ரம்ப் ஆட்சியில் வங்கதேசம் தொடர்பான அமெரிக்க அரசின் அணுகுமுறை மாறிவிட்டது. வங்கதேசத்தில் தீவிரவாத அச்சுறுத்தல் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் எழுச்சி குறித்து அதிபர் ட்ரம்ப் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். கடந்த ஆண்டு வங்கதேசத்தில் எதிர்க்கட்சிகளால் புறக்கணிக்கப்பட்ட பொதுத் தேர்தலுக்கு பிறகு, ஜோ பைடன் அரசு எதிர்மறையான கருத்துகளை தெரிவித்தது.



















