
புதுடெல்லி: மே 18 –
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி பவன் குமார் சந்தானா அமைத்துள்ள ரூ.10,000 கோடி மதிப்பிலான ஸ்கைரூட் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் விக்ரம்-1 ராக்கெட் முதல் முறையாக ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விரைவில் விண்ணில் பாய்கிறது.
இஸ்ரோ நிறுவனத்தில் 8 ஆண்டுகளுக்கு முன் பணியாற்றிய விஞ்ஞானி பவன் குமார் சந்தானா. அப்போது அவரது மாத சம்பளம் ரூ.75,000. இவரும் நாகா பாரத் டாக்கா என்பவரும் இணைந்து ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை ஹைதராபாத்தில் தொடங்கினர். இதுதான் நாட்டின் முதல் விண்வெளி தொழில்நுட்ப தனியார் நிறுவனம்.
இந்நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு ரூ.10,000 கோடி. இந்நிறுவனம் தயாரித்த விக்ரம் 1 என்ற ராக்கெட் முதல் முறையாக ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து சில வாரங்களில் விண்ணில் பாயவுள்ளது.
இது குறித்து ஸ்கைரூட் நிறுவனத்தின் நிறுவனர் பவன் குமார் சந்தானா கூறியதாவது: மனிதர்களால் இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகவும் சவாலான இயந்திரம் ராக்கெட்தான். உலகெங்கிலும் நடந்த ராக்கெட் ஏவுதல்களால் நான் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். இந்த ஆர்வம் என்னை இஸ்ரோவுக்கு அழைத்துச் சென்றது. இந்தியாவின் பாகுபலி ராக்கெட் எல்விஎம்-3 திட்டத்தில் பணியாற்றினேன். அந்த அனுபவம், பிற்காலத்தில் ஸ்கைரூட் நிறுவனமாக உருவெடுப்பதற்கான தொழில்நுட்ப மற்றும் உணர்வுபூர்வமான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.
கடந்த 2022-ல் இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான ‘விக்ரம் எஸ்’ ஏவியதன் மூலம் ஸ்கைரூட் ஏற்கெனவே வரலாற்றில் தனது பெயரைப் பதிவு செய்தது. தற்போது, சுமார் 160 மில்லியன் டாலர் நிதி முதலீடு மற்றும் ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமான சந்தை மதிப்புடன், இந்தியாவின் முதல் தனியார் விண்வெளித் தொழில்நுட்ப நிறுவனமாக இது உருவெடுத்துள்ளது
விண்வெளியை அனைவருக்கும் சாத்தியமாக்குவதே எங்களது நோக்கம். ஒரு வாடகை காரையோ, அல்லது ஒரு வாடகை விமானத்தையோ முன்பதிவு செய்வது போல, ராக்கெட்டை வாடகைக்கு எடுத்து விண்வெளிக்குச் செல்வதும் எதிர்காலத்தில் எளிதாகும். விரைவில் ‘விக்ரம் 1′ ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படவுள்ளது. இது சுமார் 300 கிலோ எடையைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது. நாங்கள் இனி தயாரிக்கும் ராக்கெட்டுகள், விண்வெளி சுற்றுப்பாதைக்குக் கிட்டத்தட்ட ஒருடன் எடையைக் கொண்டு செல்லும் திறனுடன் இருக்கும்.
இப்போது தரவு மையங்கள் விண்வெளியில் அமைக்கப்பட உள்ளன. தகவல் தொடர்பு, நேரடியாக மொபைலுக்கான தொடர்பு போன்ற அனைத்துப் பயன்பாடுகளும் இந்தத் தேவையை அதிகரிக்கின்றன. பெரிய செயற்கைக்கோள்களுக்குப் பதிலாகச் சிறிய செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் ஒன்றாக இணைந்து செயல்படும் விண்வெளி தொகுப்புகளை சாத்தியமாக்குகிறது. இதனால் விண்வெளித் துறையின் பொருளாதாரத்தையே மாற்றி அமைத்து, ஸ்கைரூட் போன்ற சுறுசுறுப்பான நிறுவனங்களுக்குப் பல வாய்ப்புகளை உருவாக்குகிறது. இவ்வாறு பவன் குமார் தெரிவித்தார்.
















