
சென்னை: ஏப்ரல் 21-
சென்னையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும் முதல்வருடன் சென்று வாக்கு சேகரித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இதனால், அனைத்துக் கட்சியினரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் 6 கட்டங்களாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று முன்தினம் இரவு சென்னை திரும்பிய முதல்வர், சென்னையில் மயிலாப்பூர், ஆயிரம்விளக்கு, தியாகராய நகர் தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
நேற்று காலை சென்னை அண்ணா நகர், மதுரவாயல், விரும்பாக்கம் ஆகிய தொகுதிகளில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பூங்காக்கள், மார்க்கெட் பகுதிகளில் நடந்து சென்று, பொதுமக்களிடம் ஆதரவு கோரினார்.
நேற்று மாலை திருவிக நகர் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து புளியந்தோப்பு காவல் நிலையம் அருகே பிரச்சாரத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கினார். அவருடன் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவாலும் இணைந்து பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: டெல்லியில் 2 முறை முதல்வராக இருந்த அர்விந்த் கேஜ்ரிவால் நமது அழைப்பை ஏற்று பிரச்சாரத்துக்காக தமிழகம் வந்துள்ளார். அவர் பாஜகவுக்கு ஜென்ம விரோதியாக இருப்பவர். எந்த மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் அஞ்சாதவர். அவர் மீது அபாண்டமான வகையில் ஊழல் குற்றச்சாட்டை சுமத்தினர்.
அவரை கைது செய்து சிறையில் அடைத்து, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவரை வலியுறுத்தினர். உயிரே போனாலும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று போராடியவர் கேஜ்ரிவால். உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி, தன் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் பொய் என்று நிரூபித்து விடுதலையாகி வெளியே வந்துள்ளார்.
அவர் உங்களைத் தேடி வந்து திமுகவுக்கு ஆதரவு கேட்கிறார். அந்த அளவுக்கு அவருக்கும், நமக்கும் தொடர்பு இருக்கிறது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள மாதிரிப் பள்ளிகளை திறக்க உந்துதலாக இருந்தவர் கேஜ்ரிவால். மீண்டும் தமிழகத்தில் நம் ஆட்சி அமைந்ததும், 1,000 ஸ்மார்ட் பள்ளிகளைத் திறப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், எழும்பூர், துறைமுகம், ராயபுரம் பெரம்பூர், ஆர்.கே.நகர் தொகுதிகளில் முதல்வர் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெரம்பூரில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நான் யாரையும் தாக்கியோ, விமர்சித்தோ, தரக்குறைவாகவோ பேச விரும்பவில்லை. அந்த பழக்கமும் எனக்கு கிடையாது. கடந்த முறை திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியில் 90 சதவீத பணிகளை முடித்து விட்டோம். மீதம் 10 சதவீத பணிகள் உள்ளன. மத்திய அரசு போதிய நிதியை விடுவிக்காததுதான் அதற்கு காரணம். மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்து, நாடாளுமன்றத்தில் தோல்வியை சந்தித்த முதல் மசோதா, தொகுதி மறுவரையறை மசோதாதான். மத்திய அரசுக்கு கவுன்ட்-டவுன் தொடங்கிவிட்டது.


















